

அடுக்குமாடி குடியிருப்பு கட்டு மானப் பணிகளை கண்காணிக்க சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என அர சுக்கு நீதிபதி ரகுபதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி ஆணையம், அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் வருமாறு:
காப்புறுதி தொகுப்பு திட்டம், வங்கி, கட்டுமானதாரர் ஆகி யோரிடையே முக்கோண பொறுப்புகளை உருவாக்குதல், குறைந்த அளவாக 10 ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை வைப்பீடு செய்யுமாறு பெருந்திட்ட பணி களை மேற்கொள்ளும் நிறு வனங்களை வலியுறுத்துதல் போன்ற அம்சங்களுடன் விரிவான சட்டத்தை இயற்ற வேண்டும். அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தை வலுவூட்ட வேண்டும். பெருந்திட்டங்களை கட்டாயமாக கண்காணித்து மேற்பார்வையிட, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் சிறப்புக் குழு ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஆணையத்தின் பரிந்துரை களை அரசு கவனமாக ஆய்வு செய்து, ஆணையத்தின் முடிவு களை ஏற்றுக் கொள்வதென தீர்மானித்து அதற்கான அர சாணையையும் வெளியிட்டுள் ளது. ஆணையத்தின் பரிந் துரைப்படி விரிவான சட்டம் இயற்றவும், குழு அமைக்கவும், சிறப்புக் குழு அமைத்து தற்போது நடந்து வரும் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து தக்க ஆணைகள் பிறப்பிக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கருணைத் தொகையை அரசு வழங்கியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கியுள்ளது. பணியாளர் இழப்பீட்டு சட்டத்தின் கீழ் அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியோர், அருகில் குடியிருப்போருக்கு இழப்புகளை மதிப்பீடு செய்து அத்தொகையை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க அதன் வழிகாட்டி குறிப்புகள் அனுமதிக்கவில்லை என்பதால் சாத்தியமில்லை. அதே நேரத்தில் இழப்பீட்டை பெற அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியவர்களுக்கும், அருகில் குடியிருப்போருக்கும், குடியிருந்தவர்களுக்கும் உதவ சட்டப்படியான வழிவகைகளை அரசு ஆராயும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.