

நோயின் கொடுமையால் மக்கள் பசித்திருக்கவோ, பொருளாதார சிரமத்திற்கு உட்படவோ கூடாது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.10) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்ற தமிழக அரசு நாள்தோறும் நடவடிக்கைகளை பல்வேறு துறைகளின் மூலம் எடுத்து வருகிறது.
இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 16 நாட்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும். ஆனாலும் கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கையானது நீடித்துக்கொண்டே போகிறது.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏழ்மையில் இருப்பவர்கள், அமைப்பு சாராத்தொழிலாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் போன்றோரின் அன்றாட அடிப்படைத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே அவர்களின் நாட்கள் கடந்து செல்கின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசு பல வழிகளில் உதவிகள் செய்து நம்பிக்கை கொடுத்துள்ளது.
இப்பேற்பட்ட சூழலில் கரோனாவின் தாக்கமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்திக்கொண்டே போவதால் இதனைக் கட்டுப்படுத்தவும், விரைவில் நோயின் தாக்கத்திலிருந்து விடுவிக்கவும் ஊரடங்கை நீட்டிப்பது அவசியமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழக மக்களும் கரோனாவில் இருந்து தப்பிக்க ஊரடங்கை கடைபிடித்து வருகிறார்கள். காரணம் தனித்திருத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவை தான் இந்நோயிலிருந்து தப்பிக்க இருக்கின்ற முதன்மையான முக்கியமான வழியாக இருக்கிறது.
எனவே, நாட்டு மக்கள் கரோனா பரவலின் பாதிப்பிலிருந்து விடுபட மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்க முன்வருமேயானால், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உட்படாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் தமிழக அரசு மத்திய அரசிடம் தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.
ஊரடங்கால் பொது மக்கள் தனித்திருக்கலாம் ஆனால் நோயின் கொடுமையால் பசித்திருக்கவோ, பொருளாதார சிரமத்திற்கு உட்படவோ கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே தமிழக அரசு ஊரடங்கை தொடர நினைத்தால் அவசர அவசியத் தேவைக்கேற்ப உள்ளூர் பயணம் மேற்கொள்வதற்கும், பொது மக்களுக்கு உணவுப்பொருட்கள் குறைந்த விலையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், ஏழைகள், அமைப்புசாராத் தொழிலாளிகள் போன்றோரின் குடும்பத்திற்கு உணவுப்பொருட்கள் இலவசமாக கிடைப்பதற்கும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் உள்ளிட்ட பலவற்றில் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கின்ற வகையில் முன்னேற்பாடான, முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.