

தொழிலாளர் பற்றாக்குறையால் பருப்பு வகைகள் உற்பத்தி குறைந்துள்ளது. அதன் காரணமாக பருப்பு வரத்து குறைந்து, மளிகை கடைகளில் இருப்பு வைத்துள்ள பருப்புகளின் அளவு குறைந்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கடைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதிகளில் 1 கோடிக்கும் அதிகமானோர் வசித்துவருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மளிகை மற்றும் காய்கறி கடைகளை காலை6 முதல் பிற்பகல் 1 மணி வரைதிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடைகளில் கடந்த இரு வாரங்களாக விற்பனை நடைபெற்று வந்த நிலையில், அந்த கடைகளுக்கு போதிய அளவு பருப்பு வரத்து இல்லாததால் பல கடைகளில் துவரை, உளுந்து, கடலை பருப்பு, பாசி பருப்பு ஆகியவற்றின் இருப்பு குறைந்து வருகிறது. கடைகளில் இருப்பில் உள்ள பருப்பு வகைகள், இன்னும் ஒரு வாரத்துக்கே விநியோகிக்க முடியும் என சிறு மளிகை கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இதனால் பருப்பு வகைகள் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:
சென்னையில் பல்வேறு இடங்களில் கச்சா பருப்புகளில் இருந்து தோல் நீக்குதல், சொத்தை, தூசு நீக்குதல், தரம் பிரித்தல், பாக்கெட் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
ஊரடங்கு அமல்படுத்திய நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள்சென்னை திரும்பவும் போக்குவரத்து வசதி இல்லை. இதனால்,தற்போது கச்சா பருப்பு இருப்புபோதுமான அளவு இருந்தபோதி லும் கச்சா பருப்பிலிருந்து, விற்பனைக்கு உகந்த பருப்பாக மாற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக சிறு கடை களுக்கு விநியோகிப்பதும் குறைந்துள்ளது. அதனாலேயே கடைகளில் பருப்பு தட்டுப்பாடு ஏற் படுகிறது.
இருப்பினும் குறைந்த அளவு தொழிலாளர்களைக் கொண்டு பருப்பு உற்பத்தி செய்து வருகிறோம். அதன் மூலம் முடிந்த வரை பருப்பு வகைகள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்போம். இந்த காலகட்டத்தில் தேவைக்கு அதிகமாக பருப்பு வகைகளை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது சிறு கடைகளில் துவரம் பருப்பு கிலோ ரூ.125, உளுத்தம் பருப்பு ரூ.138, கடலைப் பருப்பு ரூ.110, பாசிப் பருப்பு ரூ.130 என விற்கப்படுகின்றன. ஊரடங்கு காலத்தில் மட்டும் சுமார் ரூ.15 வரை பருப்புகளின் விலை உயர்ந்துள்ளது.