Published : 10 Apr 2020 07:50 AM
Last Updated : 10 Apr 2020 07:50 AM

தேவை மக்கள் தொழில்நுட்பங்களுக்கான அறிவியல் ஆராய்ச்சி

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

கடந்த ஆண்டு அக்டோபரில் 3 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்று குழியில் விழுந்து இறந்தபோது, செயற்கைக்கோள் செய்யும் தேசம் ஏன் இதற்கான மீட்புக் கருவி செய்யவில்லை என்றகேள்வி பொது வெளியில் எழுந்தது.

அதற்கு அடுத்த மாதம் சென்னையில் 25 இளைஞர் ஒருவர், பேரங்காடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது உயிரிழந்தார். அப்போதும், இந்திய அறிவியல் சமூகம் இதற்கான கருவியை கண்டுபிடிக்காதா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆழ்குழாய் மீட்புக் கருவிகள் சிலவற்றை தனி மனிதர்களும் கல்லூரி மாணவர்களும் உருவாக்கியபோதும் தொழில்முறையிலான ஆராய்ச்சியும் சோதனைகளும் பின்புலத்தில் இல்லாததால் இக்கருவிகளின் உபயோகமும் மீட்புப் பணி வெற்றிகளும் ஒரு குறுகிய வட்டத்தில் தான் உள்ளன.

கரோனா வைரஸ் அச்சுறுத்தும் இந்த ஊரடங்கு காலத்தில், மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கான தேவை மறுபடியும் உணரப்படுகிறது. துரித முகக்கவச தொழில்நுட்பம், குறைந்த விலை செயற்கை சுவாசக்கருவி, ட்ரோன்கள், ரோபோக்கள் சார்ந்த மருத்துவ தொழில்நுட்பங்கள் எனப் பட்டியல் நீள்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேசிய அளவில் ஏன் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற கேள்வி எழலாம். நமது தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொன்றுக்கும் ஆராய்ச்சிக் கட்டளைகள் (Mandates) உண்டு. இதன்படி நம் நாட்டில் விண்வெளி, பாதுகாப்பு, தொழில்துறை, உயிரி தொழில்நுட்பம், அணுசக்தி என துறை சார்ந்தஆராய்ச்சியில் தேசிய ஆராய்ச்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வுக்கூடங்களின் துறை சார்ந்த ஆராய்ச்சிகளின் துணைப் பலன்களாக (Spin offs) சில மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் வாய்ப்பதுண்டு. உதாரணமான விமானம் மற்றும் ஏவுகணை பாகங்கள் தயாரிக்க எடைகுறைந்த, அதேவேளையில் வலிமையான இழைவலுவேற்றிய நெகிழி (Fibre Reinforced Plastic) உருவாக்கப் பட்டது.

இந்த நெகிழிப் பொருள், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை நடைகருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டது. இக்கருவிகளின் எடை அலுமினிய நடைகருவிகளின் எடையில் பத்தில் ஒரு பங்கு தான்.

இதுபோல ராணுவ சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த டைட்டானியம் மனித உடலுடன் ஒத்துப்போகும் (Bio Compatible) உலோகம் என்பதால், இதைப் பயன்படுத்தி இதய நோயாளிகளுக்கு அடைப்பை சரி செய்ய, ரத்த நாளத்தில் பொருத்தப்படும் வலைகுழாய் (Stent) செய்யப்பட்டது. மலிவு விலை மருத்துவ சாதனங்களை பலருக்கும் இவை சாத்தியப்படுத்தின. இதற்கான முயற்சிகளை ஏ.பி.ஜே.அப்துல் கலாம் முன்னெடுத்தார்.

இப்படி துறை சார்ந்த ஆராய்ச்சியின் துணைப் பலன்களை, மக்களுக்கு கொண்டுசெல்லும் நடைமுறை வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆனால் மக்களின் பொதுத் தேவைகளை ஆராய்ந்து, அவற்றுக்காக முழுமூச்சுடன் முழுநேர ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் தேசிய அமைப்பு இந்தியாவில் இல்லை.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தேசிய அளவில் அறிவியல் தொழில்நுட்ப முயற்சிகளை முன்னெடுக்கிறது. இருப்பினும் அது அரசின் ஒரு துறை என்ற அளவில் அதன் வீச்செல்லைகள் விரிவுபடவில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம், அறிவியல் தொழிலக ஆராய்ச்சி மன்றம் உள்ளிட்ட தேசிய ஆய்வு மன்றங்கள் நம் நாட்டில் உள்ளன. இவையும் துறைசார்ந்த ஆராய்ச்சி நோக்கங்களுடன் அரசின் குறிப்பிட்ட துறைகளின் கண்காணிப்பில் இயங்குவதால், துறைகள் கடந்த மக்கள் பார்வையும் செயல்பாடுகளும் சாத்தியமாகவில்லை.

தேசிய அளவில் கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்களை நிதி ஆயோக் வகுத்து வருகிறது. இதன் 23 துறைகளில் ஒரு துறையாக அறிவியல் தொழில்நுட்பம் உள்ளது. இவ்வமைப்பு கொள்கையளவில் பங்களித்தாலும், மத்திய, மாநில ஆய்வகங்களையும் கல்வி நிறுவனங்க ளையும் ஒருங்கிணைத்து மக்கள்சார்ந்த தொழில்நுட்பப் படைப்புகளை உருவாக்கும் வீச்சும், பலமும் கொண்டதாக இல்லை. எனவே தேசிய அறிவியல் அமைப்புக்கான வெற்றிடம் நாட்டில் உள்ளது.

மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களுக்காக புதிய ஆய்வகங்களை நிறுவாமல், ஏற்கெனவே இயங்கி வருகின்ற பல்வேறு மத்திய, மாநில அரசு ஆய்வகங்களின் நிபுணத்துவத்தையும் கட்டமைப்புகளையும் பயன்படுத்தி, ஆய்வு முயற்சிகளை ஒருங்கிணைத்து புதிய படைப்புகளை வெளிக்கொணர ஒரு தேசிய ஆராய்ச்சி அமைப்பு தேவை.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, பல தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளன. அரசு-தனியார் நிறுவனங்கள் இடையே பெரும்பாலும் தொடர்புஇருப்பதில்லை. இவற்றின் நிபுணத்துவத்தையும் மக்களுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்க பயன்படுத்தலாம்.

எனவே அரசு-தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணியையும் புதிய தேசிய அமைப்பு செய்ய வேண்டும். ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பல புதுமையான தொழில்நுட்ப யோசனைகளுடன் உழைத்து வருகின்றன. இவற்றையும் தேசிய தொழில்நுட்ப நீரோட்டத்தில் இணைப்பது அவசியம்.

அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உள்ள துடிப்பு மிக்க பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சி முயற்சிகளை ஒருங்கிணைத்து மக்களுக்கான தொழில்நுட்ப படைப்புகளாக மாற்ற இந்த தேசிய அமைப்பு நிச்சயம் உதவும். இந்தக் கல்வி நிறுவனங்களை அரசு மற்றும் தனியார் ஆய்வுக்கூடங்களுடன் ஒருங்கிணைத்தால்மிகச்சிறந்த ஆய்வுகளை மிகக்குறைந்த செலவில் முன்னெடுக்கலாம்.

கல்வி நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு ஆய்வகங்களில் பல சமயங்களில் ஒரேதலைப்பில் ஆய்வுகள் செய்யப்பட்டு பொருட் செலவும் நேர விரயமும் ஏற்படுகின்றன. ஆராய்ச்சி ஒருங்கிணைப்பும் வழிகாட்டுதலும் வாய்த்தால் இந்தக் குறைபாடுகளை போக்கலாம்.

புதிய தேசிய ஆராய்ச்சி அமைப்பு இன்னொரு அரசுத்துறையாக அமையாமல் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். மத்திய, மாநில, தனியார் துறை ஆய்வகங்களின் விஞ்ஞானிகளை இதில் தேவைக்கேற்ப சுழற்சி முறையில் பணியமர்த்தலாம்.

பேரிடர் நேர்ந்த பிறகு அவற்றுக்கான உடனடி தொழில்நுட்பத் தீர்வுகளை தேடாமல், முன்கூட்டியே திட்டமிட்டு தொழில்நுட்ப ஆய்வுகளை வழிநடத்தி மக்களுக்கான படைப்புகளை உருவாக்கும் நுட்பம் நம்மிடம் வளர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x