

என்எல்சியில் நேற்று முதலாவது சுரங்கம் முன்பு மறியல் செய்ய முயன்ற 2 ஆயிரம் தொழிலாளர் களை போலீஸார் கைது செய்தனர்.
நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர் கள், ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 15-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதுவரை நடந்த அனைத்துகட்ட பேச்சுவார்த்தை களும் தோல்வியடைந்த நிலையில், நேற்று முதலாவது சுரங்கம் வாசல் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.
எனவே, 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்று காலை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நெய்வேலி முதலாவது அனல்மின் நிலை யம் அருகில் உள்ள கியூபாலத்தில் திரண்டனர். தொமுச தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கச் செயலாளர் ராம.உதயகுமார் முன் னிலை வகித்தார். தொமுச பொருளாளர் அண்ணாதுரை, அஊதொச அபு, அல்போன்ஸ், சிஐடியு வேல்முருகன், பாட்டாளி தொழிற்சங்கம் திலகர் உட்பட அனைத்து தொழிற்சங்க நிர் வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர், அவர்கள் அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு முதலாவது சுரங்கத்தை நோக்கிச் சென்றனர். ஊர்வலம் பாதிதூரம் சென்றபோது தொழிலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர், ஊர்வலமாக வந்த சுமார் 2 ஆயிரம் பேரை கைது செய்தனர். இதற்கிடையே, இன்று (5ம் தேதி) சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட் டத்தை தீவிரப்படுத்த தொழிற் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.