

அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகையும், உணவுப் பொருட்களும் வழங்கும் உத்தரவினை தளர்த்தி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 நிவாரணத் தொகையையும், உணவுப் பொருட்களையும் வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“கொரோனா வைரஸின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மிகப்பெரும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அறுவடை செய்து சந்தைகளுக்கு அனுப்ப இயலவில்லை. முக்கியமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் வராத காரணத்தால் அனைத்து விளைபொருட்களும் விளைநிலங்களிலே அழிந்து கொண்டுள்ளன.
குறிப்பாக மா, பலா, வாழை, திராட்சை, கொய்யா, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மலர்கள் வீணே அழிந்து வருகின்றன. அதைப்போன்றே பல மாவட்டங்களில் விளைவித்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் களத்துமேட்டிலேயே தேங்கியிருக்கும் நிலையில் உள்ளது.
இந்த விவசாயிகளைக் காப்பாற்ற இடைத்தரகர்களை நம்பாமல் அரசே நேரடியாக விவசாய விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் ஏப்.6ம் தேதி எங்கள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கைகளாக வலியுறுத்தியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போன்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 1000 நிவாரணத் தொகை, அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களையும் குடும்ப அட்டைகள் இல்லாத புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுகளை செயல்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் அவசர ஆணைகளைப் பிறப்பித்து நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே, அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகையும், உணவுப் பொருட்களும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவினை தளர்த்தி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 நிவாரணத் தொகையையும், உணவுப் பொருட்களையும் வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.
மேலும், தற்போது கிடைக்கும் செய்திகளின் படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையும் உணவுப் பொருட்களும் முழுமையாக வழங்கப்படாத நிலை உள்ளது. சில இடங்களில் ஒரு பகுதியினருக்கு இந்தத் தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இன்னொரு பகுதியினருக்கு அரிசி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு பகுதியினருக்கு பருப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அநேகமாக சமையல் எண்ணெய் பெரும்பகுதி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
விவசாரித்ததில் போதிய இருப்பு இல்லையென நியாய விலைக்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மிகுந்த நெருக்கடி உள்ள இந்த நேரத்தில் பகுதி பகுதியாக பொருட்களைப் பிரித்து வழங்குவது மக்களைக் காப்பாற்ற உதவாது.
மேலும், வழங்கப்படும் அரிசி மிகவும் தரம் குறைந்ததாக புளுத்துப்போன அரிசி வழங்கப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இவ்விசயத்தில் தலையிட்டு அறிவிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் தரமானதாகவும், அனைவருக்கும் கிடைக்கும்படியாகவும் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.