

ராமநாதபுரம் அருகே தனியார் பொறியியற் கல்லூரியில் கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அண்ணா பல்கலைக்கழக பொறியியற் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 440 படுக்கைகள் கொண்ட கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூடுதல் சிகிச்சைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாந்தை பகுதியில் உள்ள தனியார் பொறியியற்
கல்லூரியில் கரோனா சிகிசிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து லாந்தை, எல்.கருங்குளம், கன்னண்டை, அச்சங்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இன்று கல்லூரி முன்பு முற்றுகையிட்டு, மதுரை-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தையால் போராட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
இதேபோன்று கடந்த வாரம் வெளிமாநிலத்திலிருந்து வந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை திருப்புல்லாணியில் உள்ள அரசு கட்டிடத்தில் தனிமைப்படுத்த அழைத்துச் சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து போராட்டத்தை தூண்டியதாக 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஒருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.