

தேனி மாவட்டம் குரங்கணி முதுவாக்குடி மலைகிராம மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
தேனி மாவட்டம் போடி குரங்கணி அருகே உள்ளது முதுவாக்குடி. மலைகிராமமான இங்கு ஆதிவாசி, பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் குடும்ப அட்டை இல்லாத பயனாளிகள் அரசின் உதவி தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தனர்.
இதனை அறிந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை கணக்கெடுத்து தேவையான அரிசி பருப்பு மற்றும் மளிகை பொருட்களை உடனே வழங்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட அம்மா பேரவை சார்பில் குரங்கணியில் இருந்து குதிரைகள் மூலம் முதுவாக்குடிக்கு அத்யாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் அறிவுறுத்தலின்படி பேரவை நிர்வாகிகள் இவற்றை அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் துணைமுதல்வரின் நேர்முக உதவியாளர் ராஜஅழகணன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி, அரண்மனைசுப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.