பூவரசம்பூ, இலை கலந்த நீர்: ஆண்டுதோறும் இயற்கை கிருமி நாசினியை தெளித்து திருவிழா கொண்டாடும் சிவகங்கை கிராம மக்கள்

பூவரசம்பூ, இலை கலந்த நீர்: ஆண்டுதோறும் இயற்கை கிருமி நாசினியை தெளித்து திருவிழா கொண்டாடும் சிவகங்கை கிராம மக்கள்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நோய்களில் இருந்து காக்க ஆண்டுதோறும் இயற்கை கிருமி நாசினியை தெளித்து கிராம மக்கள் திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் உள்ள முத்துமாரி அம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.

திருவிழாவின்போது காட்டுப் பகுதிகளில் பூவரசம்பூ, இலையைப் பறித்து வந்து ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பர். பூவின் நிறம் முழுவதும் தண்ணீர் பரவி, மஞ்சள் நீராக மாறும். தண்ணீரும் வாசனையாக இருக்கும்.

அந்த நீரை ஊர் முழுவதும் தெளிப்பர். இதன் மூலம் நோய்கள் அண்டாது என அப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.

இந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலவண்ணாரிருப்பு கிராம மக்கள் திருவிழா நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளனர்.

ஆனால் பூவரசம்பூ பறித்து தண்ணீரில் ஊற வைத்து அதனுடன் மஞ்சள், வேப்பிலையும் அரைத்து கலந்து மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் இளைஞர்கள் தெளித்தனர்.

மேலும் அவர்கள் அருகேயுள்ள கீழவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி கிராமங்களிலும் தெளித்தனர். இது இயற்கை கிருமி நாசினி என்பதால் எங்கள் பகுதிக்கு எந்த கொள்ளை நோயும் வராது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in