

ரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ரயில்வே துறையின் பதிலை அடுத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்தியா முழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக ரயில்வே துறை 5,000 ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 2500 பெட்டிகளுக்கு மேல் தயாராகிவிட்டன.
இந்நிலையில் ரயில் பெட்டிகளை கரோனா தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்து வழக்கறிஞர்கள் முனுசாமி, மகேந்திரபாபு, இளையராஜா ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற உள்ளதாக ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. போதிய சுகாதாரமில்லாத ரயில் பெட்டிகளை கரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் காணொலிக் காட்சி மூலம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தெற்கு ரயில்வே சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
கரோனா தொற்று ஆரம்பக்கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தவே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்படவில்லை. தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை இல்லாத கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்தப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு முதற்கட்ட அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்றும், அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.