

தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2100 பேரில் 400 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை ஆகிய ஊர்களில் துப்புரவு பணியாளர்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை மற்றும் கோவில்பட்டியில் உள்ள துப்புரவுப் பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 568 பேருக்கு முகக்கவசம், கையுறைகள், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.
மேலும், கோவில்பட்டியில் வசிக்கும் திருநங்கைளுக்கும் மளிகை மற்றும் காய்கறி பைகள் வழங்கப்பட்டன. அதே போல், மாவட்ட லைல்டு லைன் சார்பில் கரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை அமைச்சர் தொடங்கி வைத்து, துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சரிடம் தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் மனு வழங்கினார்.
கடம்பூரில் தனியார் தண்ணீர் லாரி மூலமும், கழுகுமலையில் தீயணைப்பு வாகனம் மூலமும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டார்.
கயத்தாறில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை தொடங்கி வைத்தார். கழுகுமலை, முடுக்குமீண்டான்பட்டி கிராமங்களில் கபசுர குடிநீர் வழங்குவதை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கடம்பூரில் வேளாண்மை துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிக்கு டிராக்டர் வழங்கப்பட்டது.
கழுகுமலையில் தனியார் எண்ணை தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம், கோவில்பட்டியில் நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவின்போது, 2 தனியார் பள்ளிகள் தனியார் மருத்துவமனை, அரசு ஓய்வூதியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் பாஸ்கரன், மணிகண்டன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குற்றாலிங்கம், நகராட்சி ஆணையாளர் ராஜாராம், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயம், மக்காச்சோளம் பயிர் செய்த விவசாயிகளுக்கு 3690 பேருக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ.3.85 கோடி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது விவசாயிகளுக்கு பேருதவியாகவும், வரப்பிரசாதமாகவும் இருக்கும்.
மாவட்டம் முழுவதும் 2100 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். அவர்ளை தொடர்ந்து கண்காணித்து, பரிசோதித்து 400 பேர் வரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடவடிக்கைகளின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக குறைந்துள்ளது.
அதே போல், 17 பேர் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது, என்றார் அவர்.