

மதுரையில் ‘கரோனா’ நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் சிறப்பு வார்டுகள் மற்றும் அவர்கள் வசித்த பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மதுரையில் இதுவரை 24 பேர் ‘கரோனா’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டநிலையில் 2 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ‘கரோனா’ பாதிக்கப்பட்ட பகுதியில் ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சுகாதாரப்பணியாளர் சென்று கிருமி நாசினி தெளித்தால் அவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் இருப்பதால் ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடக்கிறது.
முதற்கட்டமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ‘கரோனா’ நோயாளிகள் தங்கி சிகிச்சைப்பெறும் சிறப்பு வார்டு மற்றும் அவர்கள் வசித்த குடியிருப்பு பகுதகளில் இன்று கிருமிநாசினி தெளிக்கும் பணி நடக்கிறது.
‘கரோனா’வால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இடம்பெற்ற மேலமடை, நரிமேடு, தபால்தந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் மாநகராட்சி நேற்று கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
ஏற்கெனவே கரோனோ தடுப்பு நடவடிக்கையாக தினந்தோறும் இந்த பகுதிகளில் ஸ்ப்ரேயர், தீயணைப்பு வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கிருமி நாசினி தெளிக்கும் பணியினை துரிதப்படுத்தும் வகையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் நடைமுறையை தொடங்கி உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்துள்ளார்.