

கோடை விடுமுறையை இந்த நேரத்தில் உற்சாகத்துடன் கழிக்க வேண்டிய பள்ளி குழந்தைகள் ‘கரோனா’ ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிப் போய் உள்ளனர்.
செல்போனில் வீடியோ ஹேம் விளையாடுவது, ஓவியம் வரைவது, டிவி பார்ப்பதில் பொழுதைப்போக்கினாலும் அதுவும் தற்போது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படுத்த தொடங்கிவிட்டது.
விளையாடவும், நண்பர்களை பார்க்கவும் வீட்டை விட்டு வெளியே செல்ல பெற்றோர் அனுமதிக்காததால் அவர்களுடன் முரண்டுபிடிப்பது, அழுதுபுரள்வது என்று கூண்டிற்குள் அடைப்பட்ட பறவைகள் போல் வீட்டிற்குள்ளே குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களை உற்சாகப்படுத்தவும், இந்த ஊரடங்கு விடுமுறையை அவர்கள் பயனுள்ளவகையில் கழிக்கும் வகையிலும் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் வீட்டில் இருந்தபடியே குழந்தைகளுக்கு தினமும் ஒரு பறவையை பற்றி ஆன்லைன் வகுப்பு மூலம் வகுப்பெடுக்கிறார்.
இதுகுறித்து ரவீந்திரன் கூறுகையில், ‘‘தற்போது 40 குழந்தைகள், அவர்கள் பெற்றோர் தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைன் கேம்ப் மூலம் என்னிடம் ஒவ்வொரு நாளும் ஒரு பறவையினத்தை அறிந்து கொள்கிறார்கள்.
உதாரணமாக ஒரு பறவையை பற்றி சொல்லும்போது அதில் எத்தனை வகை, அதன் பழக்கவழக்கம், அவை சாப்பிடும் உணவு தானியங்கள், எங்கெங்கு காணப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை குழந்தைகளுக்கு புரிகிற கதைகள், வீடியோக்கள் மூலம் சுவாரசியமாகவும், கலகலப்பாகவும் இந்த ஆன்லைன் வகுப்புகள் சென்று கொண்டிருக்கிறது. பறவைகளை மட்டுமில்லாது இயற்கையையும், அதனை சார்ந்துள்ளஉயிரினங்களையும் பற்றிய புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறோம்.
குழந்தைகள், புது விஷயங்களை கற்றுக் கொள்வதால் அவர்கள் பெற்றோரும் சந்தோஷமடைகின்றனர். இந்த ஆன்லைன் வகுப்பு தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும்.
இந்த வகுப்பில் பங்கேற்றவர்களை கொண்டு தனியாக Online Briding Camp என்ற வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி உள்ளோம். ஆன் லைன் வகுப்பு இல்லாத நேரத்தில் குழந்தைகள், தாங்கள் அன்று சொல்லிக்கொடுத்த பறவைகளை ஓவியமாக வரைவது, அதை பற்றி சந்தேகங்கள் கேட்பதுமாக Online Briding Camp வாட்ஸ் அப் குரூப் மூலம் கலந்துரையாடல் செல்கிறது. குழந்தைகள், வீட்டின் மொட்டை மொடியில், பால் கனியில் நின்றுஅவர்கள் அன்று பார்த்த பறவைகளை புகைப்படம் எடுத்து இந்த வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டு அந்த பறவையினத்தை பற்றி கேட்பார்கள்.
இப்படி பறவைகள் சூழ் உலகத்தை குழந்தைகளுக்கு இந்த ஆன் லைன் வகுப்புகள் மூலம் அறிமுகம் செய்து வருகிறோம். இந்த ஆன்லைன் வகுப்பில் தங்கள் குழந்தைகளைபங்கெடுக்க விரும்பும் பெற்றோர் https://us04web.zoom.us/j/803393614என்ற லிங்கை ஒபன் செய்து பங்கேற்கலாம், ’’ என்றார்.