ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 கண்காணிப்புக் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமருடன் முதல்வர்கள் சந்திப்பு நடக்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கரோனா வைரஸுக்கு இதுவரையில் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்த வைரஸ் பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் மட்டுமின்றி அனைத்து துறைகளையும், கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடுக்கி விட்டுள்ளார்.

அதோடு, தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில், ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சை, நோயாளிகள் பராமரிப்பு, கருவிகள் வாங்குவது, மருத்துவமனைகள் ஒருங்கிணைப்பு, கரோனா தடுப்பு, மக்களுக்கான பிரச்சினைகள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப்பொருட்கள் கிடைப்பதைக் கண்காணிப்பது, அவசரப் பிரச்சினைகளைக் கையாளுவது, உணவுப் பதுக்கல் தடுப்பு, வெளிமாநிலத்தவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 12 கண்காணிப்புக் குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள், இந்தக் குழுக்களின் தலைவர் தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போது சமுதாயப் பரவல் ஏற்படாமல் தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆரம்பத்தில் சில மாவட்டங்களில் இருந்த கரோனா தற்போது 34 மாவட்டங்களில் பரவியுள்ளது. சென்னை, கோவையில் அதிக பாதிப்பு உள்ளது. இதனால் ஊரடங்கை மேலும் கடுமையாக்கி பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுப்பது, பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் தடையின்றிக் கிடைக்கவும், மருத்துவ உபகரணங்கள் தேவை, கொள்முதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும்போது தமிழகத்தின் கோரிக்கையாக வைக்க உள்ளது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in