பள்ளிக் கல்வி தொடர்பாக சந்தேகமா? - புதுச்சேரியில் பெற்றோர், பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சூழலில், பள்ளிக்கல்வி தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் அதைத் தெளிவுபடுத்த புதுச்சேரி கல்வித்துறை கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு நீண்டகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இச்சூழலில், பள்ளிக் கல்வி தொடர்பாக பெற்றோருக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. குழந்தைகளுக்கு எப்படி தொடர் கல்வி தருவது, குழந்தைகளுக்கு எப்படி உதவுவது என பலரும் கேள்வியுடன் உள்ளனர்.

இது தொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு கூறுகையில், "கரோனா பரவுவதைத் தடுக்க புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் பெற்றோர்கள், பொதுமக்களுக்கு பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக பல சந்தேகங்கள், விளக்கம் பெற வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இதற்கு விளக்கம் அளித்து தீர்வு காண பள்ளிக் கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டு அறையை ஏற்பாடு செய்துள்ளது. இந்த அறை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். இங்குள்ள அலுவலரை வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வழியாக தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.

பணியில் உள்ள அலுவலர் மக்களின் கேள்விக்கு உடனடி விளக்கம் அளிப்பார். தேவைப்படும் கேள்விக்கு மேலதிகாரியிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிப்பார். கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 94882 01820. புதுவை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in