

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு மஞ்சள் நீரில் நனைத்த துண்டால் பரிவட்டம் கட்டி கும்ப மரியாதை செலுத்தி, பணத்தை மாலையாக அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் 11 தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் அவர்களுக்கு இன்று (ஏப்.9) கும்ப மரியாதை செலுத்தி பாரம்பரிய முறைப்படி மஞ்சள் நீரில் நனைத்த துண்டை பரிவட்டம் கட்டி, பணத்தை மாலையாக அணிவித்தும் கற்பூர தீபம் ஏற்றி ஆரத்தி எடுத்தும் மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் வினோத்ராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். நிறைவாக ஊராட்சி செயலாளர் பிரபாகர் நன்றியுரை ஆற்றினார்.