

வெளிநாடுகளில் இருந்து தருமபுரி திரும்பிய யாருக்கும் இதுவரை கரோனா அறிகுறி இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வெளிநாடுகளில் இருந்து தருமபுரி திரும்பிய 666 பேரில் 393 பேர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இதர 273 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து தருமபுரி திரும்பிய யாருக்கும் இதுவரை கரோனா அறிகுறி இல்லை.
வெளி மாநிலங்களில் இருந்து ஊர் திரும்பிய 9,865 நபர்களையும் அவரவர் இல்லங்களில் தனிமையில் இருக்கச் செய்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர்களிலும் இதுவரை யாருக்கும் கரோனா தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.
இதுநாள் வரை தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லை என்றபோதும் தொற்று யாருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், 1 நகராட்சி என அனைத்து பகுதிகளும் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் விநியோகம் செய்யப்படுகிறது.
தனியார் மளிகை, காய்கறிக் கடைகளில் பொருட்களின் விலை ஏறாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதவிர, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வீடு தேடி காய்கறிகள் செல்லும் வகையில் வேளாண் வணிகப் பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு ஊரடங்கு தடைக் காலம் முடியும் வரை மக்கள் தங்கள் இல்லங்களிலேயே தனிமையில் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.