

வடமாநிலங்களில் இருந்து மளிகை பொருட்களை ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள் தடையின்றி தமிழகம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக, அதிமுக மாநிலங்களவை குழு உறுப்பினர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு உத்தரவு தொடர்பாகவும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது குறித்தும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
மோடி, அமித் ஷா அழைப்பு
முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, திமுக உள்ளிட்டகட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அழைப்பு விடுத்தனர்.
இதன் அடிப்படையில், திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவும், அதிமுக சார்பில் மாநிலங்களவை நாடாளுமன்ற குழு தலைவர் நவநீதகிருஷ்ணனும் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், கட்சிகள் வாரியாக அதன் தலைவர்கள், கரோனாவைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
மத்திய அரசின் நடவடிக்கை
கூட்ட முடிவில், அதிமுக சார்பில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்ற மாநிலங்களவை குழு தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பை இந்தியாவில் கட்டுப்படுத்த மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்ற விவரங்களை 3 துறைகளைச் சேர்ந்த செயலர்கள் விளக்கினர். மருத்துவம், பொருளாதாரம் மற்றும் ஊரடங்கு தொடர்பாக நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படங்கள் காட்டப்பட்டன. இதில் இருந்து பிரதமர் எடுத்துள்ள முயற்சிகளை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இது தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிடும் என நம்புகிறேன். தமிழகத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்தையும் வடஇந்திய மாநிலங்களில் இருந்துதான் பெறுகிறோம். எனவே, வட இந்தியா மாநிலங்களின் வழியாக மளிகை பொருட்கள் எடுத்துவரும் வாகனங்களை தடுத்து நிறுத்தாமல், எளிமையாக தமிழகம் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் அதிகமாக கரோனா பாதிக்கப்பட்டதில் 2-வது மாநிலம் தமிழகம் என்பதைக் குறிப்பிட்டேன். 144தடை உத்தரவு என்பது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை என்பதால், இது குறித்து பிரதமர், முதல்வர் ஆகியோர் தான் முடிவெடுக்க முடியும். முதல்வர் இது தொடர்பாக முடிவெடுப்பார்.
அதிமுக முழு ஒத்துழைப்பு
அதிமுக சார்பில், கரோனா தடுப்புக்காக மத்திய அரசு மற்றும் பிரதமர் எடுத்துள்ள, எடுக்க உள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மாநிலங்களில் இருந்து பேசியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, வரும் 11-ம் தேதி மாநில முதல்வர்களுடன் நடைபெறும் கூட்டத்துக்குப் பின்பு, பிரதமர் மோடி முடிவெடுத்து அறிவிப்பார் என கூறப்படுகிறது.