கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அளிக்கப்படும் தொகை சமூக பொறுப்பு நிதியாக கணக்கிட முடியும்: தாராளமாக நிதி வழங்கும்படி தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அளிக்கப்படும் தொகை சமூக பொறுப்பு நிதியாக கணக்கிட முடியும்: தாராளமாக நிதி வழங்கும்படி தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கும் தொகையை சமூக பொறுப்பு நிதியாக கணக்கிட முடியும் என்பதால், வருமான வரிச்சலுகையை கருத்தில் கொண்டு தாராளமாக நிதி வழங்கும்படி தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் பணிகளுக்காக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மனமுவந்து பங்களிப்பை அளிக்க முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நிதியை பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியாக கணக்கிட தெளிவுரை வழங்கும்படி பல்வேறு நிறுவனங்கள் கோரியுள்ளன.

மத்திய அரசின் பெரு நிறுவன விவகாரங்கள் துறை கடந்த மார்ச் 23-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், மக்கள் நலம் பேணுதல், மேம்படுத்துதல்,சுகாதாரம், நோய்த்தடுப்பு, தூய்மைப்பணி, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றின் கீழ் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அளிக்கப்படும் நிதியும், பெருநிறுவன சமூக பங்களிப்புக்கு தகுதி பெறும் என தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கடந்த மார்ச் 23-ம் தேதி உத்தரவின்படி மார்ச் 24-ம் தேதி முதல் வரும் ஜூன் 30-ம் தேதி வரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கும் நன்கொடையை கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல், மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், நுகர்பொருட்கள் வாங்குதல், தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதி, பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பு சுகாதார பராமரிப்பு உருவாக்குதல், வீடற்ற ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு உணவளித்தல், உலர் உணவு பொருட்களை வழங்குதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்.

எனவே, பெருநிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் கிடைக்கும் வருமான வரிச்சலுகையை கருத்தில் கொண்டு கரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வசதியாக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in