

எஸ். முஹம்மது ராஃபி
இலங்கையில் கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க 10 டன் மருத்துவப் பொருட்களை அன்பளிப்பாக இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், அங்கு காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் 185 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 34பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இலங்கையில் கரோனா வைரஸ் நோயாளிகள் 2,000 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளதாக அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டை சமாளிக்க, அந்நாட்டு அரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 10 டன் மருத்துவப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்தது. இந்தப் பொருட்கள் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு வந்தடைந்தன.
இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எத்தகையசூழ்நிலையிலும் இலங்கைக்கான ஆதரவில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை காண்பிக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. இந்தியாவில் காணப்படும் சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தனது நட்பு நாடுகளுக்கு தமது வளங்களை பகிர்ந்துகொள்வதில் இந்தியா மிகவும் உறுதியாகவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபய நன்றி
இந்தியாவின் இந்த உதவிக்காக இந்திய மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.