Published : 08 Apr 2020 09:08 PM
Last Updated : 08 Apr 2020 09:08 PM

மங்காத மனிதநேயத்தின் மாண்பு; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த காவலருக்கு  வைகோ போனில் பாராட்டு

சாலையில் கவலையுடன் நடந்துச் சென்ற கர்ப்பிணிப்பெண்ணின் நிலையை விசாரித்து அறுவை சிகிச்சைக்காக ரத்தம் கொடுத்த காவலரின் செயலைக்கண்டு நெகிழ்ந்துப்போய் தன் கைப்பட கடிதம் எழுதி பாராட்டியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

திருச்சி மாவட்டம்¸ மணப்பாறை காமராஜர் சிலை சோதனைச்சாவடியில் பணியாற்றும் காவலர் சையது அபுதாகீர் சாலையில் சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு அவரது நிலையறிந்து அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் இரத்தத்தை தானே கொடுத்துள்ளார்.

தக்க சமயத்தில் கொடுத்த ரத்தத்தால் அறுவைச் சிகிச்சை நடந்து அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த நிகழ்வை பத்திரிகையில் படித்த வைகோ இதுகுறித்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

இன்றைய தமிழ் நளேட்டில் வந்த செய்தி என் நெஞ்சில் இன்பச் சிலிர்ப்பினை ஏற்படுத்தியது. மணப்பாறை அருகே உள்ள இரட்டைப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும், சுலோச்சனா எனும் அவரது நிறைமாத கர்பிணி மனைவியும் பிரசவம் பார்ப்பதற்காக மணப்பாறையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். கர்ப்பிணித் தாய்க்கு இரத்தம் செலுத்த வேண்டிய நிலை.

ஆனால் அந்தப் பெண்ணின் இரத்த வகையைச் சேர்ந்த இரத்தம் அந்த மருத்துவமனையில் இல்லாததால், சிகிச்சை செய்ய முடியாமல் திரும்பினர். வேதனையில் நடந்துகொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியில் பணியில் இருந்த காவல்துறை இளைஞர், வளநாட்டைச் சேர்ந்த சையது அபுதாகிர் இந்தத் தம்பதியிடம், “என்ன என்ன வருத்தமாகச் செல்கிறீர்களே! காரணம் என்ன?” என்று கேட்டார். நிலைமையை விளக்கினர்.

அந்தக் கர்ப்பிணித் தாயின் இரத்த வகையும், தன் இரத்தமும் ஒரே வகைதான் என்பதை உணர்ந்த சையது அபுதாகீர் அவர்களை அழைத்துக்கொண்டு அதே மருத்துவமனைக்குச் சென்று இரத்தம் கொடுத்துள்ளார். சுகப்பிரசவம் ஆயிற்று. பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம்.

இந்தச் செய்தி அறிந்தபோது, என் உள்ளத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. “மதம் என்பது மனிதர்களைப் பிரிக்கும் சுவர் அல்ல - மனிதநேயத்தைத் தழைக்கச் செய்யும் மலர்க்கொடி” என உளம் பூரித்தேன். மனிதநேயப் பண்பாளர் சையது அபுதாகிரை அலைபேசியில் தொடர்புகொண்டு இதயம் நிறைய வாழ்த்தினேன்.

சையது அபுதாகீர் போன்ற மனிதாபிமானச் சிற்பிகளால் மனிதநேயம் தழைப்பது மட்டுமல்ல, அவர் பணியாற்றும் காவல்துறைக்கும் புகழ் மகுடமாகும்.

அந்த இலட்சிய இளைஞர் வாழ்வாங்கு வாழ்க”.

இவ்வாறு வைகோ வாழ்த்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x