Published : 04 Aug 2015 04:39 PM
Last Updated : 04 Aug 2015 04:39 PM

சசிபெருமாள் பாதையை கொச்சைப்படுத்துவது இழிவான அரசியல்: தமிழக அரசு மீது ஸ்டாலின் தாக்கு

"2003-ல் மது விற்பனையை ஆரம்பித்து வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை திறந்து மதுவை ஆறாக ஓட விட்டது அதிமுக ஆட்சி. இந்த உண்மைகளை, பொய்களையே திரும்பத்திரும்ப சொல்லி மறைத்து விட முடியாது" என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில், ''மதுவிலக்கு கோரி தன்னலமற்ற வகையில் போராடிய காந்தியவாதி சசிபெருமாளின் தியாக மரணத்தைக் கொச்சைப்படுத்தியதற்காக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர்களைத் தரந்தாழ்ந்து விமர்சிப்பதன் மூலம் மதுவிலக்கு பெரும்பான்மை தமிழ்மக்களின் கோரிக்கையைத் திசைதிருப்பப் பார்க்கிறார் அமைச்சர் விஸ்வநாதன். மதுவுக்கு எதிராக மக்கள் விரோத அதிமுக தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்துகின்றன. கட்சிகளுக்கு அப்பாலுள்ள தாய்மார்களும்,சமூக ஆர்வலர்களும், பெரியோர்களும், மாணவர்களும் போராடி வருகின்றனர்.

மதுவிலக்கு தேவை என்ற கிளர்ச்சி உணர்வை புரிந்து கொள்ளாமல் கிஞ்சிற்றும் மதிக்காமல் மதுக்கடைகளை மூடமுடியாது என ஆணவத்தோடு அவர் பேசுவது, ரோம் பற்றி எரிந்த போது அலட்சியத்தோடு பிடில் வாசித்த நீரோ மன்னனை நினைவூட்டுகிறது.

உயர் நீதிமன்றத்தின் ஆணைக்குப் பிறகும் குமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை சந்திப்பு மதுக்கடையை அகற்றாதது ஏன்? நியாயமான கோரிக்கைக்காகப் போராட வந்தவரோடு ஒரு வட்டாட்சியரைக்கூட அனுப்பிப் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்? அதைச் செய்திருந்தால் போராட்டத்தைத் தடுத்து உன்னதமான அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கலாமே?

மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாத, செயலிழந்த அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக தரந்தாழ்ந்த வகையில் பேசுவது மிகவும் மலிவான திசைதிருப்பும் தந்திரமன்றி வேறில்லை.

தீரர் சசிபெருமாள் ஏதோ வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தவரைப் போல கொச்சைப்படுத்துவது இழிவான அரசியல். எந்த நோக்கத்துக்காக அவர் போராடினாரோ அதை நிறைவேற்றுங்கள் என்றுதான் அவரது குடும்பத்தினரும் சில இயக்கங்களும் கோருகின்றன அதை வைத்து ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் கூறுவது தனது இயலாமையை மறைக்கும் முயற்சியே தவிர வேறில்லை.

மதுவிலக்கைத் தளர்த்தியது பற்றி கருணாநிதி மீது பழித்துரைக்க அதே கோயபல்ஸ் பிரசாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்.

1971- ல் தளர்த்தப்பட்டாலும் மூன்றே ஆண்டுகளில் அதாவது 1974-ல் மீண்டும் பூரண மதுவிலக்கு கருணாநிதி ஆட்சியிலேயே அமலுக்கு வந்துவிட்டது. நெருக்கடி காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை மதுவிலக்கு அமலில் இருந்ததை மக்கள் அறிவார்கள்.

1981-ல் மதுவை மீண்டும் அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி மது ஆலைகளை திறந்ததும் அதிமுக ஆட்சிதான். 1983ல் டாஸ்மாக் நிறுவனத்தை உருவாக்கியது அதிமுக ஆட்சி. 2003-ல் அரசே மது விற்பனையை ஆரம்பித்து வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை திறந்து மதுவை ஆறாக ஓட விட்டது அதிமுக ஆட்சி. இந்த உண்மைகளை, பொய்களையே திரும்பத்திரும்ப சொல்லி மறைத்து விட முடியாது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x