

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாலைகளில் பிரம்மாண்டமான ஓவியம் வரைந்து கரோனா வைரஸ் தடுப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சிலர் தேவையின்றி சாலைகளில் நடமாடுகின்றனர்.
அவர்களுக்கு நூதன தண்டனை வழங்குவது, வழக்கு பதிவது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தும் நடமாட்டம் குறையவில்லை. இதையடுத்து மாவட்ட ஓவியர் சங்கம், போலீஸார் இணைந்து காரைக்குடி சாலைகளில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரமாண்டமாக கரோனா வைரஸ் ஓவியங்களை வரைந்துள்ளனர்.
அம்பேத்கர் சிலை, பெரியார் சிலை, தேவர் சிலை அருகே இதுபோன்று பிரமாண்டமான ஓவியங்களை வரைந்துள்ளனர்.
சாலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிவோரையும், வீட்டை விட்டு வெளியே வருவோரையும் எச்சரிக்கும் விதமாக தெருவில் சுத்தாதே கரோனாவை வீட்டிற்கு கொண்டு வராதே, 144 தடை உத்தரவை மதிக்கவுடம், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முககவசம் அணியவும், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவும் போன்ற வாசகங்களையும் எழுதியுள்ளனர்.