

ஊரடங்கால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு பிரினிவரையும் அடையாளம் கண்டு நிவாரணம் வழங்கப்படுகிறது என ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் டி.ஜி.வினய் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு 19 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர் சிகிச்சையில் உள்ளனர்.
இவர்களோடு தொடர்புடைய 382 பேர் அடையாளம் காணப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலமடை, நரிமேடு, தபால்தந்திநகர், மேலூர், எழுமலை, திருமங்கலம் ஆகிய பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
73,396 குடும்பங்களைச் சேர்ந்த 3,15,877 பேரை கண்காணிக்க 902 சுகாதார குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தினசரி கிருமி நாசினி 4 ஆயிரம் கிலோ பயன்படுத்தப்படுகிறது. 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் மாவட்டம் முழுவதிலும் கிராமங்கள்தோறும் தெளிக்கப்படுகிறது.
52 இடங்களில் காய்கறி சந்தைகள், 81 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ளன.
இதன்மூலம் மக்களின் அத்தியாவசிய தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுகிறது. 2,920 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவும், பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
வீடு இல்லாத, ஆதரவற்றோர் 410 பேருக்கு 3 நேர உணவு, இருப்பிட வசதி, மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
1.39 லட்சம் ஓய்வூதியர்கள், 8.56 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வீடுகளில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும், விவசாயிகளின் பொருட்களை கொள்முதல் செய்யவும், வேளாண் பணிகள் தொடரவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மல்லிகை உள்ளிட்ட அழுகும் பொருட்களை சந்தைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள், அழகர்கோயிலில் வலம் வரும் குரங்குகளுக்கும் தன்னார்வலர்கள் உதவியோடு உணவு வழங்கப்படுகிறது.
கரோனாவை பரவாமல் தடுப்பதுடன், இதன் எதிரொலியாக பாதிக்கப்படும் பலருக்கும் உதவிகள் வழங்கப்படுகிறது. பாதிக்கப்படுவோர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் உரிய உதவிகள் செய்யப்படும்.
எனவே மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நோய் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.