Last Updated : 08 Apr, 2020 05:54 PM

 

Published : 08 Apr 2020 05:54 PM
Last Updated : 08 Apr 2020 05:54 PM

கரோனா விவகாரம்: தமிழக சுகாதாரத் துறை இனி செய்ய வேண்டியவை என்னென்ன?

கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், சீனா, ஈரான் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவில் கரோனா வைரஸின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் 5,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 160 பேர் பலியாகியுள்ளனர். 468 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸால் அதிகம் தொற்று ஏற்பட்டுள்ள முதல் ஐந்து இடங்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி, முதன்முதலில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சுமார் 30 நாட்களில் தமிழகத்தில் மட்டும் தற்போதுவரை 690 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 7 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்து வரும் சூழலில் தமிழக சுகாதாரத் துறை இந்த அவசர நிலையை எவ்வாறு கையாள்கிறது என்பது பற்றி பல நிபுணர்கள், மருத்துவர்களிடம் பேசியதை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

கரோனா வைரஸ் பரிசோதனைகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு வந்தடைந்த சுமார் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேருக்கு கரோனா வைரஸுக்கான முதற்கட்டப் பரிசோதனையான உடல் நிலை வெப்பத்தைக் கண்டறியும் தெர்மல் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை 91,751. அரசுக் கண்காணிப்பில் 205 பேர் உள்ளனர். 28 நாள் கண்காணிப்பை நிறைவு செய்தவர்கள் 19,060 பேர். 1,766 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை 5,305 பேருக்கு ரத்த மாதிரிப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சுமார் 690 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4,099 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கு தமிழகத்தில் 18 பரிசோதனை மையங்கள் ( இதில் 11 அரசு , 7 தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானது) தற்போது செயல்பாட்டில் உள்ளன. ஆனால், தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கவனக் குறைவு

கரோனா வைரஸ் தொற்று விவகாரத்தை ஆரம்பத்திலேயே தமிழக அரசு கூடுதல் கவனத்துடன் கையாண்டிருக்க வேண்டும். அவ்வாறு கவனமாகச் செயல்படத் தவறியதன் விளைவுதான் தற்போது தமிழகத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக் காரணம்.

மேலும், கரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கத்தில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டபோது உடல் வெப்பநிலையை ஆராயும் தெர்மல் பரிசோதனை மட்டுமே பரிசோதிக்கப்பட்டது. ஆனால், கரோனா வைரஸின் இதர அறிகுறிகள் குறித்த பரிசோதனைகளை பயணிகளிடம் மேற்கொள்ள சுகாதாரத் துறை தவறிவிட்டது. மேலும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

கரோனா வைரஸ் பாதிப்பு என்பது ஒவ்வொரு தனி நபருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு இரண்டு நாட்களில் தெரியும் அறிகுறிகள் சிலருக்கு 14 நாட்கள் கழித்துதான் தெரிகிறது. அவ்வாறு இருக்கையில் இந்தப் பரிசோதனைகளால் ஒரு சிலர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். அறிகுறிகள் வெளிப்படாத நபர்கள் மூலம் தொற்று பரவி இருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா?

அதுமட்டுமல்லாது சிலருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளே வெளிப்படுவது இல்லை. ஆனால், இவர்கள் வைரஸைக் கடத்துபவர்களாகச் செயல்படுகிறார்கள். இதனையும் அரசு முன்னரே கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இக்கேள்விகளை மருத்துவ நிபுணர்கள் தமிழக சுகாதாரத் துறையை நோக்கி முன் வைக்கின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியபோதுதான் அங்கிருந்து வரும் பயணிகளையும் பரிசோதிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில் விமானத்தில் மூலம் பயணம் மேற்கொண்டவர்களை எளிதாகக் கண்டறிந்து அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கலாம்.

ஆனால் ரயில், பேருந்து மூலம் பயணித்த அனைவரையும் கண்டறிவது என்பது சிரமமான ஒன்று. இம்மாதிரியாக பரிசோதனைக்கு உட்படாமலே நிறைய பேர் வெளியே கலந்து விட்டார்கள். இதன் காரணமாகத்தான் தற்போது தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கூடிக் கொண்டு வருகிறது. அதன் விளைவைத்தான் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டும்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ‘Single Source Event’(ஒரிடத்திலிருந்து வந்தவர்கள்) -லிருந்து வந்தவர்களை மட்டும்தான் தற்போது கவனத்தில் எடுத்துக்கொண்டு தமிழக சுகாதாரத் துறை பரிசோதித்து வருகிறது. இவர்களைத் தவிர்த்து தனி நபர் சார்ந்த பரிசோதனைகளை விரைவாக அரசு அதிகரிக்க வேண்டும்.

மூன்றாவது நிலையான சமூகத் தொற்றுக்கான அறிகுறியும் தற்போது தமிழகத்தில் தெரியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருப்பின் அரசு உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவப் பரிசோதனைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

தனிநபர் சார்ந்த பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கரோனா வைரஸ் பரிசோதனைகள் இந்தியாவில் மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே ( இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 1,40,293 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்) நடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் கரோனா வைரஸ் பரிசோதனைகள் குறைவான எண்ணிக்கையிலேயே நடத்தப்பட்டுள்ளன.

பரிசோதனைகளை அதிகப்படுத்தினால்தான் எவ்வளவு பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மை நிலவரம் தெரியும். எனவே பரிசோதனைகளை தமிழக அரசு உடனடியாக துரிதப்படுத்த வேண்டும். அப்போதுதான் நோய்த் தொற்றை தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆய்வக டெஸ்ட் கருவிகள்

1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உள்ளதாகவும், ஏப்ரல் 9-ம் தேதிக்கு மேல் ஆய்வுகள் தீவிரமாகுமென்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே தமிழக முதல்வர் கூறியபடி விரைவில் தமிழகத்தில் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மருத்துவர்கள், செவிலியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தரமான பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது தேவையான அளவு உள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரசு கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிப்படைத் தன்மை

கரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் தமிழக சுகாதாரத் துறையில் தற்போது வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. முன்னர் கரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களில் சரியான எண்ணிக்கை விவரம் கூறப்பட்டு வராத நிலையில் தற்போது உண்மையான தகவலை முன் வைப்பது பொதுவெளியில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க தமிழகம் இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாக பரிசோதனைகளை அதிகரித்து கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான மருத்துவ சிகிச்சை ஆய்வுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், காவல் துறையின் ஆலோசனைகளுக்கும் பொதுமக்கள் செவி சாய்த்து ஒத்துழைப்பு அளித்து கரோனா நோய்த் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்!

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x