

கரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் இன்று ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, நன்னகரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு உள்ள மக்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் அப்பகுதிக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தூய்மைப் பணி, சுகாதாரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நன்னகரம் பகுதியில் கரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராஜா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்பகுதியில் உள்ள மக்களுக்களின் அன்றாட தேவைகளுக்கு காய்கறிகள், பால், மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரின் குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 9 பேருக்கு, ரத்த மாதிரி பரிசோதனைக்கு எடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், தென்காசி அருகே உள்ள 2 தனியார் கல்லூரிகளுக்குச் சென்று, அங்கு கரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட முகாம் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.