

ட்விட்டர் தளத்தில் தன்னைப் புகழ்ந்து நிவாரண நிதி அனுப்பியவர்களுக்கு முதல்வர் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.
மேலும், 21 நாட்கள் ஊரடங்கால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார். மேலும், அதற்கான வங்கிக் கணக்குகளையும் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், முன்னணி நிறுவனங்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அனுப்பிவைத்து வருகிறார்கள். மேலும், சிலர் நிதியுதவி அனுப்பிவிட்டு அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு அனுப்பி வருகிறார்கள்.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிலருக்கு முதல்வர் பதிலளித்து வருகிறார். அவ்வாறு இன்று (ஏப்ரல் 8) முதல்வர் நிவாரண நிதிக்கு 2000 ரூபாய் அனுப்பிவிட்டு அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, "உங்களையும், உங்கள் பணியையும் நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் எங்கள் பங்கை அளித்துள்ளோம். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஈசிஈ துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நாங்கள். எங்கள் 'இணைபிரியாத நட்பு' குழுமம் சார்பில் நன்கொடையைச் செய்துள்ளோம்!. இந்த சிக்கலைச் சரி செய்து எங்களைப் பெருமைப்படுத்துங்கள் சார்" என்று தெரிவித்தார்.
அதற்கு நன்றி கூறும் விதமாக முதல்வர், அவர்களுடைய ட்வீட்டை மேற்கோளிட்டு "நீங்களும் உங்கள் நண்பர்களும் இந்த நேரத்தில் ஒற்றுமையைக் காட்டி எங்களைப் பெருமைப்படுத்திவிட்டீர்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.