

ஊரடங்கு அமலாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு மதுக்கடைகள், குடோன்களுக்கு புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்டு வருகிறது.
கரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு அமலாகியுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டும் காலையில் திறக்கப்படுகிறது.
மது, சாராயக்கடைகள், பார்கள் அனைத்தும் ஊரடங்கு அமலில் இருக்கும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மது, சாராயக்கடைகள் புதுச்சேரியில் தனியாரிடம் உள்ளன. அவை ஊரடங்கால் மூடப்பட்டிருந்தாலும் கள்ள விற்பனை இருப்பதாக பல புகார்கள் வரத்தொடங்கின. இரு மடங்கு விலையில் மது பாட்டில்கள் கிடைப்பதாக குற்றச்சாட்டு நிலவியது. பலருக்கும் எளிதாக மது கூடுதல் விலைக்கு கிடைப்பதாக புகார்கள் குவியத்தொடங்கியது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் நடப்பதால் அவை குடோனுக்கு மாற்றப்படுகின்றன.
இச்சூழலில் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்போது மதுக்கடைகள், குடோன்களுக்கு சீல் வைக்கும் பணியை கலால்துறை தொடங்கியுள்ளது.