

பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மளிகைப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துத் தடையின்றிச் செயல்பட வழிவகை செய்யவேண்டும் என அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியா முழுவதும் கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் அனைத்துத் துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரதமர், மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கடந்த வாரம் சோனியா காந்தி, மன்மோகன் சிங், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், தேவகவுடா, பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் போனில் பேசிய பிரதமர் 8-ம் தேதி (இன்று) ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி இன்று பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணனும், திமுக சார்பில் டி.ஆர்.பாலுவும் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் கலந்துகொண்ட நவநீதகிருஷ்ணன் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“கரோனா பாதிப்பில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். மற்ற மாநிலங்கள் வழியாக அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவரும் வாகனங்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தோம். தமிழகத்தின் தேவை மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கோரிக்கை வைத்தோம். ஊரடங்கு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதை முதல்வர் தெரிவிப்பார்”.
இவ்வாறு நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.