

பொதுமக்கள் அதிகம் கூடும் தற்காலிக மார்க்கெட்டான புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்த கிருமிநாசினி பாதை அரை மணிநேரத்தில் பழுதானது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகம் கூடும் தற்காலிக மார்க்கெட் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் கரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி பாதையை அமைத்துள்ளனர். இப்பணியை சிஐஐ, யங் இன்டியன்ஸ், மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் அமைக்கப்பட்டது.
முதல்வர் நாராயணசாமி இன்று (ஏப்.8) காலையில் கிருமிநாசினி பாதையைத் திறந்துவைத்து நடந்து வந்தார். அவருடன் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் பங்கேற்று வந்தனர். அதையடுத்து பொதுமக்களும் கிருமிநாசினி பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகளைக் கேட்டறிந்து நாராயணசாமி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காய்கறிகளை வாங்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். விலையைக் கட்டுப்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு முதல்வரும், அமைச்சர்களும் புறப்பட்டனர்.
ஆனால், முதல்வர் திறந்து வைத்த கிருமி நாசினி பாதை அரை மணிநேரத்தில் பழுதானது. கிருமிநாசினி டேங்க்கில் நிரப்பி வைத்த பிறகு இயங்கவில்லை. இதனால் கிருமி நாசினி பாதை இயங்காததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
அதையடுத்து, மக்கள் வந்தால் கிருமிநாசினி தெளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சென்சாரில் பழுது ஏற்பட்டிருப்பதை அறிந்து சரிசெய்யப் பார்த்தனர். அதில் தொய்வு ஏற்பட்டது. பிறகு அதைத் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் வகையில் மாற்றி அமைத்தனர்.
மார்க்கெட் இயங்கும் காலை நேரம் தொடங்கி நண்பகல் வரை இந்த கிருமிநாசினி பாதையில் மக்கள் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.