Published : 08 Apr 2020 12:47 PM
Last Updated : 08 Apr 2020 12:47 PM

கரோனா சிகிச்சைக்கான ஆய்வு: 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற நாடுகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவ்வப்போது வரும் நிகழ்வுகளின் தரவுகளை ஆராய்ந்தும் வழிகாட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டு 12 குழுக்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு நோய்த்தொற்று தடுப்பு, தமிழக மக்களுக்கான பிரச்சினைகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள்,போக்குவரத்து, உணவுப் பதுக்கல் தடுப்பு, தொற்றுத்தடுப்பு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தொற்றுப் பரவலைத் தடுக்க அமைக்கப்பட்ட குழுவில் நச்சுயிரியல் நிபுணர்களை இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. மாநிலத்தில் தொற்றுப்பரவலைத் தடுக்க 19 நிபுணர்கள் அடங்கிய குழுவை சுகாதாரத்துறை அமைத்துள்ளது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த நிபுணர் குழுவில் சென்னை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ரகுநந்தன், சென்னை மருத்துவக் கல்லூரியில் ஓய்வுபெற்ற மருந்து துறை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் பரந்தாமன், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் டாக்டர் சந்திரசேகர், சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் ராமசுப்ரமணியன், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் துறைத்தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் மாநிலத்தில் தொற்றுப் பரவல் குறித்து தொடர்ந்து கண்காணித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மற்ற நாடுகளில் எடுக்கப்படும் சிகிச்சைகள், அந்நாடுகளில் குணமானவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை, நோய்ப் பரவலைத் தடுக்கும் முறை உள்ளிட்ட மருத்துவ ரீதியான அம்சங்களை ஆராய்ந்து அவ்வப்போது ஆலோசனைகளை அளிப்பார்கள். ஏற்கெனவே இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலர் குறிப்பிட்டிருந்த நிலையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அளிக்கும் பரிந்துரைகளை ஏற்று அனைத்து அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x