

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்பாட்டில் அரசின் நடவடிக்கைகளில் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
கோவில்பட்டி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட 20 படுக்கைகள் கொண்ட பிரிவை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.
பின்னர் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தையில் கிருமி நாசினி பாதையை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அமைச்சரிடம் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் ரூ.4 லட்சம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் விஜயா, சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையர் ராஜாராம், நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நகரப் பகுதிகள் மட்டுமின்றி பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் கிருமி நாசினிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸால் மனித இனமே பாதிக்கப்படக் கூடிய சூழல் நிலவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களின் நிதியை அவர்களது தொகுதிக்கு உட்பட்ட கரோனா வைரஸ் பாதிப்புக்கு பயன்படுத்த வேண்டும் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் யாருடைய உரிமையும் பாதிக்கப்படவில்லை. தானாக முன்வந்து நாம் செய்யக்கூடிய காரியம் தான். சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியை கூட கரோனா தொற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நான் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் ரூ.1 கோடியையும் இந்த தொகுதிக்கு தான் நான் பயன்படுத்த வேண்டும்.
அவசரகால நிதியாக கரோனா எதிர்ப்புக்கு அதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ளன. கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைத்து இந்த பேராபத்தில் இருந்து மனிதர்களை காக்க வேண்டிய பொறுப்பின் நாம் அனைவரும் இருக்கிறோம் என்ற உணர்வோடு பணியாற்ற வேண்டும்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தில் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அரசே மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை அளித்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் இதனை விமர்சிப்பது என்பது சரியான கருத்து அல்ல, என்றார் அவர்.