Published : 08 Apr 2020 11:42 AM
Last Updated : 08 Apr 2020 11:42 AM

சென்னையில் வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை; தொலைபேசி, இணையம் மூலமாக ஆர்டர் செய்யலாம்

சென்னையில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமச் செயலாளர் கார்த்திகேயன் இன்று (ஏப்.8) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே காய்கறிகளைக் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் என, முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 25 குடும்பங்களுக்குத் தேவையான முக்கியமான காய்கறிகளை வாகனங்களில் வைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனை அடுக்குமாடிக் குடியிருப்பு, 25 குடும்பங்கள் வசிக்கும் தெருக்களில் உள்ளவர்கள் ஆர்டர் செய்யலாம்.

மலிவான விலையில் இந்தக் காய்கறிகளை மக்கள் வாங்கிக்கொள்ளலாம். காய்கறிகளின் விலை வாகனத்திலும் ஒட்டப்பட்டிருக்கும். சிஎம்டிஏ இணையதளத்திலும் வெளிப்படையாக இருக்கும். இதனை நாங்கள் தரும் தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டும், சிஎம்டிஏ இணையதளத்தின் வாயிலாகவும் ஆர்டர் செய்யலாம்.

044 2479 1133, 90256 53376 ஆகிய எண்களை தொடர்புகொண்டு இதனை ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல்,குடிசை மாற்று வாரியப் பகுதிகள், ஏழை, நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் நாங்களே சென்றும் விற்பனை செய்ய உள்ளோம்.

அதுமட்டுமல்லாமல், தனியாக குடும்பமாக உள்ளவர்களுக்கு 6-7 நாட்களுக்குத் தேவையான காய்கறித் தொகுப்புகளும் இதில் கிடைக்கும்.

மேலும், ஸ்விக்கி, சொமேட்டோ உட்பட 3 ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் ஆர்டர் செய்து இந்தக் காய்கறிகளை வாங்கலாம். இது பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும். தேவையில்லாமல் அவர்கள் வெளியே வருவதைத் தடுக்கும்".

இவ்வாறு கார்த்திகேயன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x