Published : 23 May 2014 09:30 AM
Last Updated : 23 May 2014 09:30 AM

தென் மாவட்டங்களில் பரவுகிறது `ஜல்லிக்கட்டு’ போராட்டம்: அவனியாபுரத்தில் கடையடைப்பு, கருப்புக் கொடி ஊர்வலம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தென் மாவட்டங்களில் நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வியாழக்கிழமை கடையடைப்பு, கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. இதில் காளைகள் துன்புறுத்துப்படுவதாக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக ஜல்லிக்கட்டு அதிகம் நடைபெறக்கூடிய தென் மாவட்டங் களில் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். வியாழக்கிழமை அவனியாபுரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் 50-க்கும் மேற்பட்ட காளைகளுடன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காளைகளின் கொம்பு, கழுத்தில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அப்போது ஜல்லிக் கட்டினை மீண்டும் நடத்தும் வகையிலான சட்ட வடிவங்களை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியத்தில் தமிழர் ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள்எழுப்பப்பட்டன.

இப்போராட்டத் துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவனியாபுரத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது கருப்புக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி மாவட்டத்தில் சூரியூர், புதுகை மாவட்டத்தில் கீரனூர், சத்தியமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் பாகனேரி, கண்டுபட்டி, சிராவயல், கண்டரமாணிக்கம், காளாப்பூர், மருதங்குடி, திண்டுக்கல் மாவட்டத் தில் வத்தலகுண்டு பிள்ளைம நாயக்கன்பட்டி, சொரிப் பாறைப் பட்டி, புகையிலைப்பட்டி, சாணார் பட்டி, கொசுவபட்டி, முத்தழகுபட்டி, ஜம்புலிப்பட்டி, பழநி, தேனி மாவட்டத்தில் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி உள்ளிட்ட இடங்க ளிலும் இதே போன்ற போராட்டம் நடத்தப்பட்டது.

அந்தக் கிராமங்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் முயற்சியில் உளவுப்பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x