

கரோனா வைரஸ் பாதித்தோரை தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்க வசதியாக 2,500 பழைய ரயில் பெட்டிகள் 40 ஆயிரம் படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. குறுகிய நாட்களில் ரயில்வே செய்துள்ள இந்த சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தவும், போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து ருகிறது. இதற்கிடையே, பழமையான ரயில் பெட்டிகளை தேர்வு செய்து, கரோனா வைரஸ் சிகிச்சைக்கான வார்டுகளாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென ரயில்வே வாரியம் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 20 ஆண்டுகள் பழமையான ரயில் பெட்டிகளை தேர்வு செய்து, 8 அம்சங்களை பின்பற்றி தனி வார்டுகளாக அமைக்க வேண்டுமென ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது. நாடுமுழுவதும் உள்ள அனைத்து மண்டலங்களிலும் இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.
மொத்தம் 5,000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றுவது என்று ரயில்வே வாரியம் இலக்கு நிர்ணயித்து தனது பணியை தொடங்கியது. இதற்கிடையே, நாடு முழுவதும் 133 இடங்களில் இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றன. இதில், 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றப்பட்டதை அடுத்து, அவசர நேரத்தில் பயன்படுத்த 40,000 தனிமைப்படுத்தல் படுக்கை வசதிகள் தயாராகி உள்ளன. ரயில்வேயின் இந்த பணிக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உடனடியாக கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே துறை 20 ஆண்டுகளை கடந்த பழைய ரயில் பெட்டிகளை தேர்வு செய்து, கரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகளாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே நிர்ணயித்த இலக்கில் தற்போது 50 சதவீதத்தை குறுகிய நாட்களில் முடித்துள்ளோம். தற்போது 40 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராகவுள்ளன.
எஞ்சியுள்ள பழைய பெட்டிகளையும் தனிவார்டுகளாக மாற்றும் பணியை விரைவில் முடிப்போம். மிக குறைந்த செலவில் இதுபோன்ற புதிய நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பெட்டிகளை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்து செல்லலாம். எனவே, ரயில்வே வாரியத்தின் அறிவு றுத்தலின்படியும் மாநிலஅரசு களின் தேவை அடிப்படையிலும் இந்த படுக்கைகளை பயன்படுத் திக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.