Last Updated : 08 Apr, 2020 06:35 AM

 

Published : 08 Apr 2020 06:35 AM
Last Updated : 08 Apr 2020 06:35 AM

கரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தொலைக்காட்சிகளில் 'வைரஸ்' திரைப்படம் ஒளிபரப்பப்படுமா?- பிரச்சாரத்தனம் இல்லாத ‘த்ரில்லர்’ பாணி படம்

கரோனா குறித்து மக்களிடையே முழு அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘வைரஸ்' திரைப்படத்தை அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

மருத்துவத்துறை அதிகாரி வீட்டில் போன் ஒலிக்கிறது. ரிசீவரை எடுக்கிறார் அவர். மறுமுனையில் பேசும் பெண் மருத்துவர், "சார் மெடிக்கல் காலேஜ்ல வெண்டிலேட்டர்ஸ் எல்லாம் தீர்ந்து போச்சு. எதுவும் காலியா இல்ல. இனிமே பேஷன்ட்ஸ் வந்தா என்ன பண்றது?" என்று கேட்கிறார்.

இப்படித் தான் தொடங்குகிறது ‘வைரஸ்’ திரைப்படம். 2019-ம்ஆண்டு மலையாளத்தில் வெளியான இந்தத் திரைப்படம், தமிழ்,இந்தி, தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் சப்டைட்டில்களுடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிய நாடுகளையே அச்சுறுத்தி, 2018-ல் கேரளாவில் ஒரு நர்ஸ் உள்பட 17 பேரின் உயிரைபறித்த நிபா வைரஸின் தாக்குதல் பற்றிய தத்ரூபமான காட்சிப்பதிவே இந்தப் படம். கரோனாவைப் போலவே சுவாசமண்டலத்தைத் தாக்கி, ஆரோக்கியமாக இருக்கும் மனிதனையும் சாகடிக்கும் கொடிய வைரஸான நிபா எப்படி மனிதர்களுக்கு வந்தது, அது எப்படி பரவியது, அதை எப்படி கேரள அரசாங்கம் கட்டுப்படுத்தியது என்பதை ஆவணப்பட தன்மையோ, பிரச்சாரத்தன்மையோ இல்லாமல் ஒரு த்ரில்லர் போல விறுவிறுப்பாகச் சொன்ன படம் இது.

நோய் பற்றி புலனாய்வு

ஒரு பக்கம் மருத்துவத்துறையினர் நோயைக் குணப்படுத்த போராடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒரு விசாரணை அதிகாரி இந்த நோய் எங்கிருந்து யார் வழியாக பரவியது, இன்னும் யாருக்கெல்லாம் நோய் இருக்கும் என்று கண்டுபிடிக்கும் புலனாய்வில் ஈடுபடுவார்.

ஒரு மருத்துவர் வீட்டுக்குள் நுழைந்ததும் அவரது மகள் அப்பா என்று ஓடிப்போய் கட்டிப்பிடிக்கப் போவாள். அதைத்தடுக்கிற மருத்துவர், அப்படியே குளிக்கப்போய் தன்னுடைய உடைகளைத் தானே துவைத்துவிட்டு வருவார். தான் சிகிச்சையளித்த நோயாளிக்கு ஏதோ பெரிய பிரச்சினை இருக்கிறது என்ற உள்ளுணர்வில் அவர் இப்படி எச்சரிக்கையாக செயல்பட்டதால், அவரும் அவரது குடும்பமும் நோய்த்தொற்றில் இருந்து தப்பிப்பார்கள்.

தும்மும் போது ஒருவர் எதேச்சையாக முகத்தை மூடிக்கொள்வார். எதிரில் இருப்பவர் நோய்தொற்றின்றி தப்புவார். நிறைய முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் ஹீரோயிஸம் இல்லாமல், நிபா எனும் வில்லனை மனித சமுதாயமே எப்படி ஒன்றுபட்டு வெல்கிறது என்பதை சினிமாத்தனமே இல்லாமல் விறுவிறுப்பாகச் சொல்கிற அறிவியல் படம் ‘வைரஸ்’.

கரோனா பாதிப்பு பற்றிய தகவல் வந்த பிறகு ஏற்கெனவே இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், தங்கள் நண்பர்களுக்கு அதைப் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்கிறார்கள்.

விழிப்புணர்வு ஏற்படும்

இதுபற்றி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அமர்நாத் பிச்சைமணி கூறியதாவது:

தமிழகத்தில் இன்னமும் கூட கரோனா வைரஸின் தீவிரத்தை மக்கள் முழுமையாக உணரவில்லை. பாமர மக்களுக்கு எப்படி அதைப் புரிய வைப்பது என்று தெரியாமல் அரசும் சுகாதாரத் துறையினரும் திணறுகிறார்கள். அம்மாதிரியான மக்களுக்கு நாடகம், சினிமா மாதிரியான காட்சி ஊடகங்கள் மூலம் மிக எளிதாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

‘வைரஸ்’ படம் தமிழிலும் வந்துவிட்டது. எனவே, இந்தத் திரைப்படத்தை அனைத்து தனியார் மற்றும் அரசு தொலைக் காட்சிகளில் வெவ்வேறு நேரங்களில் ஒளிபரப்ப அரசு உத்தரவிட வேண்டும். இதன் வாயிலாக தமிழக மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். இவ்வாறு கூறினார்.

செய்யுமா அரசு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x