

காலையில் தூங்கி எழுந்ததும் நடைப் பயிற்சி, அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ செல்ல பேருந்து, ரயிலைப் பிடிக்கக் காட்டும் வேகம், மாடியில் இருக்கும் அலுவலகத்துக்கு படிக்கட்டின் ஊடே ஏறுவது, சக ஊழியர்களுடனோ, நண்பர்களுடனோ பொடி நடையாகத் தேநீர் பருகச் செல்வது இவை அனைத்தும் நம்மையும் அறியாமல் நம் உடலுக்கு சின்னச் சின்ன உடற்பயிற்சியாகவும் இருந்தது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தப் பயிற்சிகளும் சேர்ந்தே நின்றுபோனது.
இப்படியான சூழலில்தான் ஃபிட்னஸ் பயிற்றுநர் ஒருவர் தனது நண்பர்களுக்கு ‘ஃபேஸ்புக் லைவ்’ வழியாக உடற் பயிற்சி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்த ஆண்டனி பபர்லஸ் சொந்தமாக ஃபிட்னஸ் மையம் நடத்தி வருகிறார். ஊரடங்கை அடுத்து இவரது நண்பர்கள் பலரும் வீட்டிலேயே இருப்பதால் எவ்வித உடற்பயிற்சியும், ஏன் பொடிநடை கூட இல்லாமல் போய்விட்டது என புலம்பியிருக்கிறார்கள். இதையடுத்து செயலில் இறங்கினார் ஆண்டனி.
நண்பர்களைப் புத்துணர்வுடன் வைக்க அவர் கையாண்ட விதம் மிக எளிமையானது. அதன்படி, உடற்பயிற்சிக் கூடத்தைத் தேடி ஓடாமல் வீட்டில் இருந்தபடியே எளிதில் செய்யக்கூடிய சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை இலவசமாகக் கற்றுக்கொடுக்கிறார் ஆண்டனி. இதை நாம் நம் வீட்டில் இருந்தே கற்றுக்கொள்ள முடியும். தினமும் மாலை 5.30 முதல் 6.30 வரை ‘ஃபேஸ்புக் லைவ்’ (முகநூல் நேரலை) மூலமாக உடற்பயிற்சிகளைச் செய்கிறார் ஆண்டனி. வீட்டில் இருந்தபடியே இதை அவரது நண்பர்களும் திருப்பிச் செய்கிறார்கள்.
ஊரடங்கு சமயத்தில் உடல் நலத்திலும் அக்கறை காட்டும் இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து வாட்ஸ் - அப் குழு ஒன்றையும் வைத்திருக்கின்றனர். இந்தக் குழுவில் இருப்பவர்கள் பயிற்றுநர் செய்வதைப் போல் உடற்பயிற்சிகளைச் செய்து அதைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ் - அப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த நேரலை வருகிறது.
இதுகுறித்து ஆண்டனி பபர்லஸ் கூறுகையில், “ஊரடங்கால் நமது பைக் வீட்டிலேயே நிற்கிறது. ஊரடங்கு முடிந்து ஸ்டார்ட் செய்தால் உடனே ஸ்டார்ட் ஆகாது அல்லவா? அதனால்தானே அவ்வப்போது பயன்படுத்தாவிட்டாலும்கூட ஸ்டார்ட் செய்துவிட்டு ஆஃப் செய்கிறோம். நம் உடலும் ஒரு இயந்திரம்தான்.
ஊரடங்கு உடலுக்கு அல்ல. அவ்வப்போது அதற்கு சின்னச் சின்ன பயிற்சிகள் கொடுக்க வேண்டும். நண்பர்களின் ஆரோக்கியத்தை முன்வைத்துதான் இந்த முயற்சியைத் தொடங்கினேன். எனது இந்த முயற்சிக்கு அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. சின்னச் சின்ன பயிற்சிகளை தொடர்ந்து செய்தாலே நம் உடலையே நாம் காதலிக்கத் தொடங்கிவிடுவோம். அப்புறமென்ன... காதலைக் கண்ணும் கருத்துமாக பார்ப்பதைப்போல் நம் உடலையும் நேசிக்கத் தொடங்கி விடுவோம்” என்றார்.