Published : 07 Apr 2020 06:57 PM
Last Updated : 07 Apr 2020 06:57 PM

தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்வு: பீலா ராஜேஷ் பேட்டி

பீலா ராஜேஷ்: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் இன்று 69 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று (ஏப்.7) சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"இன்று வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 431. அரசுக் கண்காணிப்பில் 253 பேர் உள்ளனர். 28 நாட்கள் கண்காணிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 416. தமிழகத்தில் இரு சோதனை மையங்கள் அதிகரித்துள்ளன. ஒன்று ஈரோட்டில் அரசு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று தனியார் நிறுவனம்.

இதுவரை 5,305 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கு தமிழகத்தில் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. 69 பேரில் 63 பேர் ஒரே இடத்திற்குச் சென்று வந்தவர்கள். 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் ஒருவர் மாநிலத்திற்குள்ளேயே பயணம் செய்துள்ளார். ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்பில் இருந்தவர். இன்னும் ஒருவருக்கு எப்படித் தொற்று ஏற்பட்டது என ஆராய்ந்து வருகிறோம். இதுவரை 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக, ஒரே இடத்தில் இருந்து வந்த 1,630 பேருக்கு சோதனை செய்துள்ளோம். இவர்களுள் 606 பேருக்கு தொற்று உள்ளது. 961 பேருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. 33 பேரின் சோதனை முடிவுகள் வரவில்லை. அவர்கள் சென்று வந்த இடத்தைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

34 மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 15 லட்சம் வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 53 லட்சம் பேரைக் கண்காணித்து வருகிறோம். 30 ஆயிரத்து 369 களப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எங்களிடம் போதுமான அளவுக்கு பரிசோதனை கிட் உள்ளது. ஏற்கெனவே 4 ஆயிரம் பரிசோதனை கிட் இருந்தது. இப்போது 10 ஆயிரம் கிட் உள்ளது. மொத்தமாக, 14 ஆயிரம் பரிசோதனை கிட் உள்ளன.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும். தமிழ்நாட்டில் அதிகப்படியான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன".

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x