

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளில் பணியாற்றும் 350 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை, உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்பி சண்முகநாதன் ஏற்பாட்டின் பேரில் சாயர்புரம், பெருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி, நாசரேத், சாத்தான்குளம், தென்திருப்பேரை ஆகிய 8 பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.
இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு மொத்தம் 339 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை, உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.
மேலும், இந்த பேரூராட்சிகளில் நடைபெறும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்வதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ வழங்கினார்.