இந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை!- மதுவுக்கு எதிராகப் போராடும் நந்தினி விளக்கம்

இந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை!- மதுவுக்கு எதிராகப் போராடும் நந்தினி விளக்கம்
Updated on
1 min read

ஏப்ரல் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது இன்னும் தொடருமா என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதே தவறு என்றும், இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள் மதுவுக்கு எதிராகப் போராடி வரும் மதுரை நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும்.

இதைக் காரணம் காட்டி இவர்கள் இருவரையும் கைது செய்யக்கோரி பாஜகவினர் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு விஷயத்தில் உங்கள் குரல் மட்டும் மாறி ஒலிக்கிறதே ஏன்? என்று நந்தினியிடம் கேட்டபோது, "எங்களது கருத்துகள் திரிக்கப்படுகின்றன. எனவே, எழுத்துபூர்வமாக அனுப்புகிறேன்" என்று கூறி வாட்ஸ் - அப் வாயிலாக சில தகவல்களையும், தனது வீடியோ பதிவையும் அனுப்பி வைத்தார்.

அதன் சுருக்கம் இங்கே.

"இந்தியாவைப் பொறுத்தவரையில் கரோனா என்பது சமூகப் பரவலாக மாறவில்லை. எனவேதான் இங்கே ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை மட்டும் தனிமைப்படுத்திக் கண்காணித்தால் போதுமானது.

இந்தக் கருத்தை சும்மா, ஏனோதானோவென்று சொல்லவில்லை. உலக நாடுகளின் கரோனா தொற்று பற்றிய புள்ளிவிவரங்களையும், ஆய்வறிக்கைகளையும் அடிப்படையாக வைத்தே இதைச் சொல்கிறோம். உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அனைத்துமே இங்கே கரோனா சமூகப் பரவல் நடக்கவில்லை என்றே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

சீனா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் சமூகப்பரவல் ஏற்பட அங்குள்ள குளிர்ச்சூழலே காரணம். இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கடும் வெயில் அடிப்பதே கரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் காரணம். ஆனால், அது என்னமோ தங்களது சாதனை என்று மத்திய அரசு தம்பட்டம் அடிக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் கிடக்கிறது. பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் ஆட்சியாளர்களை நோக்கித் திரும்பாமல் இருக்க உருவாக்கப்பட்ட செயற்கையான பிரச்சினைதான் கரோனா பீதி. இன்று பொருளாதாரத்தைவிட மக்களின் உயிர் தான் முக்கியம் என்று சொல்கிற அதே அரசுதான், மக்களின் உயிரைவிட வருமானம்தான் முக்கியம் என்று டாஸ்மாக் கடைகளை நடத்தியது என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறோம்.

உலகில் உள்ள அத்தனை செல்வங்களையும் விட ஒரு தனி மனிதனின் உயிர்தான் முக்கியம் என்பதுதான் எங்களது கோட்பாடு. ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் வேலை பார்த்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போக முடியாமல் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு முதல் வாரத்தில் மட்டும் 5 குழந்தைகள் உள்பட மொத்தம் 22 தொழிலாளர்கள் பசியால் இறந்திருக்கிறார்கள். இந்த இறப்பு அதிகரித்துவிடக்கூடாது என்பதே எங்கள் கருத்து."

இதுதான் நந்தினி நமக்குத் தந்த விளக்கம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in