Last Updated : 07 Apr, 2020 03:03 PM

 

Published : 07 Apr 2020 03:03 PM
Last Updated : 07 Apr 2020 03:03 PM

ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு தபால்காரர்கள் மூலம் வீடு தேடி வரும் பணம்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி

பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பணம் எடுத்துகொள்ளும் வகையில் AEPS (Aadhar Enabled Payment system) என்ற அஞ்சல் துறை செயல்படுத்தி வரும் திட்டம் தூத்துக்குடியில் அமலுக்கு வந்துள்ளது.

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ந.ஜெ.உதயசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் வெளிவர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பணம் எடுத்துகொள்ளும் வகையில் AEPS (Aadhar Enabled Payment system) என்ற திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் அருகிலுள்ள தபால் அலுவலகத்திலுள்ள தபால்காரர் மூலமாக, வீடு தேடி வங்கி (door step banking) என்ற வசதியின் படி வீட்டிலிருந்தபடி தங்களுடைய எந்தவொரு வங்கி கணக்கில் இருந்தும் பணத்தைப் பெற்றுகொள்ளலாம்.

இந்த வசதியில் வீட்டில் இருந்தே பணம் பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரிவித்தால் போதும்.

தூத்துக்குடியில் இச்சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், முதுநிலை மேலாளர், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் தொலைபேசி எண்ணை (0461-2377233) தொடர்பு கொண்டு முகவரி போன்ற விவரங்களை தெரிவித்தால், தங்கள் பகுதி தபால்காரர் உங்கள் வங்கி கணக்கிலுள்ள பணத்துடன் இல்லம் தேடி வந்து தருவார்.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அக்கவுண்ட் என்ற டிஜிட்டல் சேமிப்பு கணக்கை தொடங்கி, தங்களது ஆண்டிராய்டு தொலைபேசியில் உள்ள பிளே ஸ்டோரில் இருந்தும், ஐபோன் பயனர்கள் ஆப் ஸ்டோரிலும் இருந்தும் இந்திய அஞ்சல் துறையின் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' மொபைல் பேங்கிங் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் முறையில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி), செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்புநிதி போன்ற திட்டங்களுக்கு பணம் செலுத்தலாம்.

இந்த சேவைகள் மட்டுமில்லாமல் மின்சார கட்டணம், மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், போஸ்ட் பெய்டு மொபைல் கட்டணம், லேண்ட்லைன் பில் கட்டணம் போன்றவற்றையும் ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி’ நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து கிளைகளுக்கும் IPOS0000001 என்ற பொதுவான ஐஎப்எஸ்சி கோர்டை பெற்றுள்ளது.

இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள், எந்த ஒரு வங்கியின் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆப் அல்லது போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற ஆப்-கள் மூலம் தங்களது இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி டிஜிட்டல் சேமிப்பு கணக்குக்கு பணம் அனுப்பலாம்.

எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி டிஜிட்டல் சேமிப்பு கணக்கைப் பயன்படுத்தி அனைத்து சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், இந்த ஊரடங்கு காலத்தில் சமூக விலகலை முழுமையாகக் கடைபிடிக்கலாம் என, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x