

கரோனா ஊரடங்கு உத்தரவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மதுப் பிரியர்கள் மட்டுமல்ல, அசைவப் பிரியர்களும்தான். ரூ.100 விலையுள்ள குவார்ட்டர் கள்ளச் சந்தையில் தற்போது ரூ.500 வரை விற்கிறது என்றால், கிலோ ரூ.600 வரை விற்ற மட்டனின் விலை நல்ல சந்தையிலேயே ரூ.1,200 வரை எகிறியிருக்கிறது.
இனி வரும் நாட்களில் இது எந்த எல்லைக்கு நகருமோ என்ற நிலையில், வசதியில்லாத ஏழை எளியவர்கள், ‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்’ என்கிற ரீதியில் உழன்று வருகின்றனர். இப்படியான சூழலில், வால்பாறையில் முள்ளம்பன்றி இறைச்சியைச் சமைத்துச் சாப்பிட முயன்ற மூன்று பேர் கையும் களவுமாகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கண்காணிப்பில் வரும் வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதியில், கடந்த 2-ம் தேதியன்று ஒரு கும்பல், அப்பகுதியில் சுற்றித்திரிந்த முள்ளம்பன்றியை வேட்டையாடி இறைச்சி சமைத்துக்கொண்டிருப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, கல்லார் வனச்சரக அலுவலர் ஷேக் உமர் தலைமையில் வனக் காப்பாளர் சதாம் உசேன் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்துள்ளனர்.
அங்கே ஆர்.சிவா (36), க.கண்ணன் (53), மாரியப்பன் (56) ஆகிய மூவர் முள்ளம்பன்றி இறைச்சியைச் சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர். இணக்கக் கட்டணமாக மூவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வால்பாறையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, “இது உள்ளூர்க்காரர்கள் நடத்திய வேட்டைதான். ஆனால், வால்பாறையைச் சுற்றியுள்ள எஸ்டேட் காடுகளில் இரவு நேரங்களில் டார்ச் அடித்துக்கொண்டு பலரும் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் காட்டுப்பன்றி, முயல், மர அணில்களைக் கண்ணி (சுருக்கு) வைத்துப் பிடிக்கின்றனர். இன்றைக்கு எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்களும் இந்த வேலையில் இறங்கிவிட்டனர்.
ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பின்னர், வால்பாறையிலும் இறைச்சி விலை எகிறிவிட்டது. எனவே, இந்த வேட்டைக் கும்பல் இன்னதுதான் என்றில்லாமல் காட்டுக்குள் கிடைக்கும் எதையும் வேட்டையாடுகிறது. இது தொடர்பாக, உள்ளூர் வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, எஸ்டேட் வாரியாகச் சென்று அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள் வனத் துறையினர். அதையும் மீறித்தான் இப்போது முள்ளம்பன்றியை வேட்டையாடியிருக்கிறார்கள்.
முள்ளம்பன்றி இறைச்சி குறித்து சில தவறான புரிதல்கள் பலரிடமும் இருக்கிறது. ‘காட்டுப்பன்றி இறைச்சியைவிட இது மேலானது. இதைச் சாப்பிட்டால் வலிமை கூடும். மூலம், வாயுத் தொல்லை, குடல் நோய்கள் தீரும்’ என்றெல்லாம் சிலர் நம்புகிறார்கள். இதனால், முள்ளம்பன்றி அதிக அளவில் வேட்டையாடப்படுகிறது. ஆனால், இது வெளியில் தெரிவதில்லை என்பதுதான் துயரம்” என்று குறிப்பிட்டனர்.
கரோனா பரவல் தரும் அழுத்தம், மனிதர்கள் மூலம் வன விலங்குகள் மீதும் விழுவது வேதனை தரும் விஷயம். வனத்துறையினர் இவ்விஷயத்தில் இன்னும் கடுமை காட்ட வேண்டும்!