

திருநெல்வேலி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இருக்கும் இடங்களில் 21 பேரின் ரத்தமாதிரிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இம்மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், களகக்காடு, பத்தமடை, வள்ளியூர், பேட்டை பகுதிகளை சேர்ந்த 36 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபோல் தென்காசி மாவட்டத்திலிருந்து 2 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் பத்தமடை, களக்காடு, வள்ளியூர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 21 பேருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர கரோனா சிறப்பு வார்டில் 5 வயது ஆண் குழந்தை உள்ளிட்ட 4 ஆண்களும், 4 பெண்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது. கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவரும்.
இதனால் வரும் நாட்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.