

கரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளை எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியவருக்கு பீலா ராஜேஷ் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்றைய (ஏப்ரல் 6) நிலவரப்படி மொத்தம் 621 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று தமிழகத்துக்குள் வந்ததிலிருந்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் மக்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், விழிப்புணர்வு வீடியோக்கள், மருத்துவமனை விசிட் எனத் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. தினமும் மாலை 6 மணியளவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, கரோனா தொற்றில் தமிழகத்தில் இன்றைய நிலை என்ன என்பது குறித்துக் கூறிவருகிறார் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ்.
பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மட்டுமன்றி, தனது ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்புபவர்களுக்கும் பதிலளித்து வருகிறார் பீலா ராஜேஷ்.
அதன்படி நேற்று (ஏப்ரல் 6) பீலா ராஜேஷின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ஒருவர், "தமிழ்நாட்டில் அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகள் யாராவது உள்ளனரா மேடம்? நமது மக்கள் தொகையில் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்? (அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கு). குறிப்பாக ஊரடங்குக்குப் பிறகு அறிகுறிகள் இல்லாதவர்களிடம் இருந்து தொற்று பரவாமல் இருக்க என்ன விதமான முன்னெச்சரிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக பீலா ராஜேஷ், "இரட்டை கண்காணிப்பு அதாவது 28 நாட்களைத் தமிழ்நாட்டில் பின்பற்றுகிறோம். சமூக விலகலும் கைகளைக் கழுவுதலும்தான் அறிவுறுத்தப்பட்ட முன்னெச்சரிக்கைகள்" என்று பதிலளித்துள்ளார்.