

தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணிகளையும் தாண்டி, விபத்துகள், பேரிடர் சமயங்களில் மீட்புப் பணிகளிலும் துணை நிற்பவர்கள்.
இன்றைக்குக் கரோனா பரவல் எதிரொலியால் தேசமே முடங்கிக் கிடக்கும் சமயத்தில், மனித குலத்துக்கு மட்டுமன்றி, சக உயிரினங்களுக்கும் பேருதவியைச் செய்து வருகிறார்கள் தீயணைப்புத் துறை வீரர்கள். மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளைச் சுகாதாரத் துறையினர், மாநகராட்சி நிர்வாகத்தினர் செய்துவந்த நிலையில், இப்போது தீயணைப்புத் துறையினரும் அந்தப் பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில் கோவை மாநகரில் மட்டும் இதற்காக 16 வண்டிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் தீயணைப்புத் துறை அலுவலர்கள்.
கோவையில் 12 தீயணைப்புத் துறை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் உள்ள தீயணைப்பு வீரர்கள், கரோனா பரவல் தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒதுங்க வீடில்லாமல் சாலையோரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் ஆதரவற்றவர்களுக்கு, மதிய உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள்.
மனித நடமாட்டம் குறைந்துவிட்டதால், உணவளிக்க யாருமின்றி ஊருக்குள் திரியும் தெரு நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகளுக்கும் உணவளித்து வருகிறார்கள். இந்தப் பணிகளின் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக பீளமேடு, ரயில் நிலையம், ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், காந்திபுரம், 100 அடி ரோடு, சிவானந்தா காலனி போன்ற பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் சாலைகளையும், அரசு வாகனங்களையும் குளோரின் நீர் கொண்டு கழுவிவிடும் பணியையும் தீயணைப்புத் துறை வீரர்கள் செய்துவருகிறார்கள்.
இது பற்றி கோவை மாவட்டத் தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது, “தெருவோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற மனிதர்கள், தெரு விலங்குகளுக்கு உணவளிப்பது, மக்களின் சுகாதாரத்தைப் பேணுவது போன்றவற்றைச் செய்யுமாறு மேலிடத்திலிருந்தே எங்களுக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது. அதனடிப்படையில் இங்குள்ள 12 தீயணைப்பு நிலையங்களில் உள்ள அத்தனை தீயணைப்பு வீரர்களும் இப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.
எங்களிடம் 350 லிட்டர், 4,500 லிட்டர், 12,000 லிட்டர் என வெவ்வேறு கொள்ளளவு கொண்ட 16 தண்ணீர் வாகனங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக இப்பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். அத்துடன், இதுவரை பொதுமக்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் 5 ஆயிரம் முகக் கவசங்களையும் வழங்கியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
கடினமான காலத்திலும், மக்களின் துயர் துடைக்கக் கடமையாற்றும் தீயணைப்புத் துறையினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!