

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் அத்தியாவசிய சத்துகள் கொண்ட 3 வண்ண குடைமிளகாய் விற்பனை மதுரை தோட்டக்கலைத்துறை மூலம் தொடங்கப்பட்டது.
இதற்காக கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு முதல் கட்டமாக 5 ஆயிரம் கிலோ விற்பனைக்கு வந்துள்ளது.
குடைமிளகாயில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் உள்ளன. மேலும், மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வை நீக்கும் Vitamin B, Folate ஆகிய சத்துக்கள் உள்ளன. மேலும் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு நல்லது. புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடைய Capsaicin உள்ளது.
சிவப்பு குடைமிளகாயில் உள்ள Lycopene இதய நலத்திற்கும் மற்றும் Beta carotene கர்ப்பகாலதிற்கும் ஏற்றது. மஞ்சள் குடமிளகாய் சுவாசக் கோளாறுகள் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு ஏற்ற நிவாரணியாக உள்ளது.
தற்போது கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனையொட்டி தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 200, ரூ. 100, ரூ. 50 ஆகிய விலைகளில் கிடைக்கும் வகையில் காய்கறி தொகுப்புப் பை வழங்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருத்துவ குணமுள்ள குடைமிளகாய்கள் கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கிருஷ்ணகிரியிலிருந்து 5 ஆயிரம் கிலோ வரவழைக்கப்பட்டுள்ளது.
மதுரை திருமங்கலத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறிச் சந்தையில் இவை விற்பனை செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கோ.பூபதி நேற்று விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
அப்போது உதவி இயக்குநர்கள் கலைச்செல்வன், புவனேஸ்வரி மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.