Published : 07 Apr 2020 10:04 AM
Last Updated : 07 Apr 2020 10:04 AM

தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 : உதவித் தொகை வழங்க வைகோ வலியுறுத்தல்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

தொழில் நிறுவனங்கள், வேளாண் தொழில் மீட்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஏப்.7) வெளியிட்ட அறிக்கையில், "உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கரோனா காரணமாக சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

லட்சக்கணக்கான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடப்பதால், தொழிலாளர்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளானது மட்டுமன்றி, தொழில் முனைவோரும் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும் நிலைமை உருவாகி வருகிறது.

தமிழகத்தின் தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்டவற்றில் இயங்கும் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. உற்பத்தியான ஜவுளி, பனியன், இன்ஜினியரிங் பொருட்களைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.

வெளிநாட்டுச் சரக்குப் போக்குவரத்து இல்லாததால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற்றுத்தான் இயங்கி வருகின்றன.

கரோனா வைரஸ் எதிரொலியாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய - மாநில அரசுகளின் வங்கித்துறை, வரித்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் தொழில் நிறுவனங்களுக்கு எவ்வித நெருக்கடியும் தரக்கூடாது.

இத்தகைய தொழில் நிறுவனங்கள் மீண்டு எழும் வரையில், வங்கிக் கடன்களைத் திரும்பச் செலுத்தக் கூடுதல் கால அவகாசம் வழங்க முன்வர வேண்டும். கடன்களுக்கான வட்டியையும் முழுமையாகத் தள்ளுபடி செய்வதுடன், புதிய தொழில் கடன்கள் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வாழ்வாதாரம் இழந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்குவதற்கு மத்திய- மாநில அரசு உதவிக் கரம் நீட்ட வேண்டும்.

தொழில் துறை போலவே வேளாண்மைத் தொழிலும் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. விவசாயிகளின் வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, எளிமைப்படுத்த வேண்டும்.

வங்கிகள் வழங்கியுள்ள வேளாண் கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகள் அளித்துள்ள பயிர்க் கடன், நகைக் கடன் உள்ளிட்டவற்றையும் தள்ளுபடி செய்வதும், புதிய வேளாண் கடன்களை விவசாயிகளுக்கு வழங்குவதும்தான் விவசாயத் தொழில் மீட்சி பெற வழிவகுக்கும்.

விவசாயத் தொழிலாளர்கள் கரோனாவிலிருந்து முழுமையாக விடுபடும் வரையில் உதவித் தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க முன்வர வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்" என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x