

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பொதுமக்கள் அதிகம்பயன்படுத்தும் 10 நுழைவு வாயில்களில் ரூ.17 லட்சம் செலவில் சுரங்கப்பாதை கிருமிநாசினி தெளிப்பான்கள் அமைக்கும் பணி நடந்துவருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ), தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரிகளுடன் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கோயம்பேடு மொத்த காய்கறி மற்றும் வணிக அங்காடி வளாகத்தினுள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்தல், குப்பை அகற்றுதல், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பணிகள் சிஎம்டிஏவின் 3 தலைமை திட்ட அமைப்பாளர்கள் தலைமையிலான குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 ஆயிரம் இலவச முகக்கவசம்
பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் தினமும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க, தினமும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளின் உதவியுடன் கோயம்பேடு வணிக வளாக அங்காடியின் உட்புற சாலைப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
கோயம்பேடு வணிக வளாகத்தின் அதிக மக்கள் போக்குவரத்து கொண்ட10 நுழைவு வாயில்கள் கண்டறியப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் ரூ.17 லட்சம் செலவில் கிருமிநாசினி சுரங்கப்பாதை தெளிப்பான்கள் அமைக்கும் பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ.1.88 கோடி நிதி
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், சென்னை மற்றும் இதர பகுதிகளில் உள்ள வாடகை குடியிருப்புகள், அரசு அலுவலர் குடியிருப்புகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து கரோனா தடுப்புப் பணிக்காக ரூ.1.88கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார். ஆய்வுக்கூட்டத்தில், வீட்டுவசதித்துறை செயலர் ராஜேஷ் லக்கானி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் த.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.