

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரம், வருவாய், ஊரகவளர்ச்சி, காவல் துறையினர் பாதிக்கப்பட்டால் ரூ.2 லட்சம் கருணைத் தொகையுடன், அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
கரோனா தடுப்புப்பணிகள், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பணிகளில் சுகாதாரம், வருவாய், காவல்துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு முகக்கவசம், கையுறை, காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகணங்கள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதுதவிர, இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பணியில் உள்ளபோது கரோனா பாதிப்புக்கு ஆளாகி உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதையும் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி, கரோனாவால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க வேண்டும்.
இதுதவிர ரூ.2 லட்சம் கருணைத் தொகையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, முதல்வர் உத்தரவு தொடர்பாக அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில், கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்போது ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, அது உறுதி செய்யப்பட்டால் அந்த அரசு ஊழியர் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.2 லட்சம் அளிக்கவேண்டும் என்றும், இந்த உத்தரவை மே 31-ம் தேதிக்குப்பிறகு மறு பரிசீலனை செய்து, அந்த சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
வருவாய் நிர்வாக ஆணையரின் இந்த பரிந்துரையை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, அதைஅதற்கான ஆணையை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.