கரோனா பாதிப்புக்கு நிவாரணம்; முதியோர்களுக்கு உதவும் பாரதி சேவா சங்கம் 

கரோனா பாதிப்புக்கு நிவாரணம்; முதியோர்களுக்கு உதவும் பாரதி சேவா சங்கம் 
Updated on
2 min read

பாரதி சேவா சங்கத்தால் முதியோர்களுக்கான ஒரு செயலி தொடங்கப்பட்டது. இதன் மூலம் சென்னையில் இருக்கும் மூத்த குடிமக்கள் எப்போது வேண்டுமானாலும் அவசர உதவிக்காக அழைக்கலாம் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் எடுத்து வருகின்றன. ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ்ஸால் நடத்தப்படும் பாரதி சேவா சங்கம் அறக்கட்டளை சென்னை நகரம் முழுக்க பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது.

இது குறித்து பாரதி சேவா சங்கத்தின் அறங்காவலர் கே.கோபாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு, குறிப்பாக குடிசைப் பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் பாரதி சேவா சங்க அறக்கட்டளையால் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் தகுதியுள்ள, நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தரப்படுகிறது.

மத்திய அரசு கோவிட்- 19 தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவித்தவுடனேயே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பாரதி சேவா சங்கம் நிவாரண உதவிக்கு மக்களிடம் நன்கொடை கோரியது. அதன்படி, மூன்று முக்கிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

# ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களுக்கு, காவல்துறையினருக்கு, மருத்துவமனைகளுக்கு முகக் கவசங்கள், கையுறைகள், சானிட்டைசர்கள் உள்ளிட்டவை விநியோகம் செய்ய வேண்டும்.

# தினக்கூலிப் பணியாளர்கள், புலம் பெயர்ந்து வந்த பணியாளர்கள், நடைபாதைகளில் உள்ள ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு சமூக சமயலறை மூலம் தினசரி உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட வேண்டும்.

#தேவை இருக்கும் குடும்பங்கள் எவை என்று சரிபார்க்கப்பட்டபின், நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்காக ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது.

# முதியோர்களுக்கான ஒரு செயலி தொடங்கப்பட்டது. இதன் மூலம் சென்னையில் இருக்கும் மூத்த குடிமக்கள் எப்போது வேண்டுமானாலும் அவசர உதவிக்காக அழைக்கலாம். சென்னையில் 125 பகுதிகளில் இதற்கான தன்னார்வலர்கள் எங்களிடம் உள்ளனர்.

# 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்கள், 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட கையுறைகள், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள், 1500க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் ஆகியவற்றை தினக்கூலிப் பணியாளர்கள், தெருவில் வசிப்பர்வர்கள், ஆதரவற்றவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், நாடோடிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், காவல்துறையினர், வெளிமாநில மக்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு வழங்கினோம்.

# இன்னும் அதிக அளவில் முகக் கவசங்கள், கையுறைகள், சானிட்டைசர்களை வழங்கும் பணி நடைபெறுகிறது. feedmychennai.org மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 10 ஆயிரத்துக்கும் மேலான உணவுப் பொட்டலங்கள் அளிக்கும் பணி நடந்து வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மளிகை சாமான் பொட்டலங்களை வாங்கி விநியோகிக்கும் பணியும் நடக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in